ஈராக் நாட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பெண்களுக்கான சட்டப்பூர்வ வயதை குறைக்கும் புதிய வரைவு மசோதாவுக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன.
ஈராக் நீதி அமைச்சகத்தால் பெண் குழந்தைகளுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஒன்பது ஆக குறைக்கும் மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா ஈராக் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஈராக்கில் தற்பொழுது பெண்களுக்கான திருமண வயது 18 ஆக இருக்கிறது. இதை மாற்றி பெண்ணுக்கு 9 ஆகவும், ஆணுக்கு 15 ஆகவும் திருத்தம் செய்து ஈராக் நாடாளுமன்றத்தில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஈராக்கில் குழந்தை திருமணமும் சமூகத்தில் பெண்கள் மீதான சுரண்டலும் அதிகரிக்கும் என்கிற கவலை எழுந்துள்ளது. இது பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை சீர்குலைத்து பெண் முன்னேற்றத்தையும் கேள்விக்குறியாக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முக்கியமாக குழந்தை பாலியல் துன்புறுத்தலை சட்டப்பூர்வமாக்கும் என்று அச்சம் பெரிதளவில் எழுந்துள்ளது.
இந்த மசோதாவுக்கு ஈராக்கின் மனித உரிமை அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு, சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை பெரிதளவில் பாதிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி, ஈராக்கில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும், 18 வயதுக்குட்பட்ட 28 சதவீத சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்யப்படுவதாக யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது. இது சட்டப்பூர்வமாக்கப்பட்டால் சிறுமிகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக அளவில் கவலை எழுந்துள்ளது.
ஈராக் நாடாளுமன்றத்தில் இருக்கும் பெண் எம்.பிக்கள் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பெரும்பான்மை ஆண் எம்.பிக்கள் மசோதாவை ஆதரிப்பதாக கூறுகின்றனர்.
சீற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள இந்த மசோதாவில் முன்மொழியப்பட்ட சட்டங்கள் என்ன குறிப்பிடுகிறது?
முன்மொழியப்பட்ட மசோதாவில், குடிமக்கள் தங்கள் குடும்ப விவகாரங்களைக் கையாள மத அதிகாரிகள் அல்லது சிவில் நீதிமன்றங்களை நாட அனுமதிக்கிறது.
முன்மொழியப்பட்ட வரைவு பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பினால் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், சில சக்திவாய்ந்த ஷியா குழுக்களிடமிருந்து வந்த குறிப்பிடத்தக்க ஆதரவால் ஆகஸ்ட் தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய திருத்தங்கள் 1959-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி குடும்ப விவகாரங்களை மத பிரமுகர்கள் கையாள்வதை நிறுத்தி, மாநில நீதித்துறைக்கு மாற்றியது. தற்போதைய புதிய மசோதா மத விதிகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை மீண்டும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள், குடும்ப விஷயங்களில் தங்களுக்கு என்ன பொருந்தும் என்பதை தீர்மானிக்க "வயதான முஸ்லிம்களுக்கு" அனுமதி வழங்குகிறது.
கூடுதலாக, இது சிவில் சட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகளை மத விதிமுறைகளுக்கு மாற வலியுறுத்துகிறது.