யார் இந்த இஸ்மாயில் ஹனியே?!
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக நடந்து வரும் யுத்தத்தின் விளைவாக ‘காசா’ பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்துவரும் போராளிக்குழுதான் ஹமாஸ். இதன் அரசியல்தலைவராக கடந்த ஏழு ஆண்டுகளாகப் பதவி வகித்துவருகிறார் இஸ்மாயில் ஹனியே.
இவர் கத்தார் நாட்டில் இருந்துகொண்டு ஹமாஸ் அமைப்புக்கு நிதி திரட்டுவது, ஹமாஸுக்கு ஆதரவாக உலகத்தலைவர்களை ஒன்றுதிரட்டுவது, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உள்ளிட்டப் பணிகளை செய்துவந்தார். இந்நிலையில் தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டுக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தி அவரும், அவரும் பாதுகாவலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 7 தாக்குதல்!
கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதத் தாக்குதல் நடத்தி 1,140 பேரைக் கொன்றதோடு, 250 பேரை பயணக்கைதிகளாகப் பிடித்துச்சென்றது. இதில் பலரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனச்சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்குப்பிறகு ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கப்போவதாக அறிவித்த இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.
கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியேவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டனர். இந்தச்சூழலில்தான் நேற்று ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு தெஹ்ரான் வந்திருந்த இஸ்மாயில் ஹனியேவை ஜியோனிஸ்ட் துரோகிகள் கொன்றுவிட்டதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.
ஜியோனிஸ்ட்கள் என்பவர்கள் யார்?!
ஜியோனிசம் என்பது இஸ்ரேலின் நிலத்தில் யூதர்களுக்கு ஒரு சொந்த நாட்டை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம். ஜியோனிஸ்ட் என்றால், இந்த இயக்கத்தை ஆதரிப்பவர் என்று அர்த்தம். இன்று, ஜியோனிசம் இஸ்ரேல் அரசியலிலும் உலகம் முழுவதும் உள்ள யூத சமூகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நேற்று ஈரான் பாராளுமன்றத்தில் பதவியேற்புவிழாவின்போது ''இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்'' என்று கோஷம் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோஷம் ஒலித்த சில மணி நேரங்களிலேயே ஹமாஸ் தலைவர் வீட்டுக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்த ஹமாஸ்
''ஜியோனிஸ்ட்டுகளின் துரோக தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். இதை அமைதியாகக் கடந்துபோகமாட்டோம். விளைவுகள் மோசமானதாக இருக்கும்'' என அறிவித்திருக்கிறது ஹமாஸ்.
போர் நிறுத்தப்பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த சூழலில் இஸ்மாயில் ஹனியே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது!