காசா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கான தங்கும் முகாமாக செயல்பட்டு வந்த ஒரு பள்ளிக்கூடத்தின் மீது, இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த தாக்குதல் 'ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை அன்று தனது விமானப்படை மூலம் காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் தளபதிகளின் ரகசிய மறைவிடமாக செயல்பட்டுவந்த அல்-தபின் பள்ளியின் கட்டுப்பாட்டு மையத்தை தாக்கியதாகக் கூறியது. கட்டுப்பாட்டு மையம் பற்றிய ஆதாரங்களை வழங்காத இஸ்ரேல், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாலஸ்தீனிய அதிகாரிகள் வெளியிடும் இறப்பு எண்ணிக்கை தவறானது என்று நிராகரிக்கிறது. அதே சமயம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹமாஸ் எதிர்வினைகள்!
"மத்திய காசா நகரின் தராஜ் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-தபின் பள்ளியில் நடந்த படுகொலை சம்பவம் ஒரு பயங்கரமான குற்றம். இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று காசா பகுதியை ஆளும் ஹமாஸ் இயக்கம் கூறியுள்ளது. பாலஸ்தீனிய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினர் இஸ்ஸாத் அல்-ரிஷ்க் ''பள்ளியில் ஆயுதம் ஏந்தியவர்கள் யாரும் இல்லை. அப்படி இருக்கையில் இஸ்ரேல் யாரை குறி வைக்கிறது. குழுவின் கட்டளை மையமாக பள்ளி பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரேல் சொன்னது ஏற்க முடியாத பொய். பொதுமக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் கூடாரங்களை குறிவைப்பதற்கான சாக்கு. இஸ்ரேல் சொல்லும் காரணங்கள் அனைத்தும் தவறான சாக்குப்போக்குகள். அவர்களின் குற்றங்களை நியாயப்படுத்த சொல்லப்படும் பொய்கள்" என்று ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவும், இந்த படுகொலைகளை நிறுத்தவும், பாதுகாப்பற்ற குடிமக்கள் மீது அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தவும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிக்கை முடிவடைகிறது.
காசாவின் அரசாங்க ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெனரல் இஸ்மாயில் அல்-தவப்தா, "எங்கள் மக்களிடையே, அதாவது அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இந்த கொடூர தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்தார்.
குழந்தைகளை காப்பாற்றுங்கள்!
"அக்டோபரில் இருந்து நடந்து வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களில் 40 சதவிகிதம் குழந்தைகள். குழந்தைகள், பள்ளியில் விடியற்காலையில் தொழுகை நடத்தியவர்கள் உட்பட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பது பேரழிவு என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது” என்கிறார்கள் தொண்டு நிறுவன அதிகாரிகள்.