செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு... 24 தொகுதிகளில் பாதுகாப்பான வாக்குப்பதிவு!

10 ஆண்டுகள் கழித்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு முதல்கட்டமாக இன்று நடைபெறுகிறது.

Puviyarasan Perumal

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒன்றுபட்ட மாநிலமாக ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால் நாடளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தற்போது ஏழு மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட 23.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

முதல்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 16 தொகுதிகளில் வாக்களிக்கின்றனர். இவர்களுக்காக ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.