கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான சம்பவத்தில் அவர்கள் குடித்தது சாராயம் அல்ல என்றும், மெத்தனால் கலந்த தண்ணீரை குடித்ததால் ஏற்பட்ட விளைவு தான் என்றும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி விஷசாராயம் குடித்தவர்களில் 65 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து சாராயம் விற்றதாக கருணாபுரத்தை சேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் மெத்தனால் வினியோகம் செய்ததாக புதுச்சேரி அடுகரையை சேர்ந்த மாதேஷ், சென்னையை சேர்ந்த சிவகுமார் உள்பட 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்தவழக்கில் முக்கியபுள்ளிகளாக கருதப்படும் கோவிந்தராஜ், விஜயா, சக்திவேல், கண்ணன், கதிரவன், சின்னதுரை, ஜோசப்ராஜ், பன்ஷில்லால், கவுதம் சந்த், மாதேஷ், சிவக் குமார் ஆகிய 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடிக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
அதாவது, கருணாபுரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் குடித்தது மெத்தனால் கலந்த சாராயம் அல்ல... மெத்தனால் கலந்த தண்ணீர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இதில் சாராயத்திற்கு பதில் தண்ணீர் கலந்தவர்கள் யார் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.