கங்கனா ரனாவத் 
செய்திகள்

‘’ஆதார் அட்டையுடன் வந்தால் மட்டுமே என்னை சந்திக்க முடியும்'’ - கங்கனா ரனாவத்!

நடிகையும், ஹிமாச்சலப்பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்பியுமான கங்கனா ரனாவத் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.

Jeeva

நாடாளுமன்ற உறுப்பினர் ஆன உடனே ஏர்போர்ட்டில் பாதுகாப்பு காவலர் தன் மேல் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் கங்கனா ரனாவத்தை மிகவும் பாதித்திருக்கிறது. அதனால் தன்னை சந்திக்க வரும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் கங்கனா ரனாவத்.

‘’ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு நிறைய சுற்றுலாவாசிகள் வருகிறார்கள். அதனால் என்னுடைய தொகுதி மக்களா என்பதை நிரூபிக்க என்னை சந்திக்க வருபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையுடன் வரவேண்டும். என் தொகுதி மக்களை மட்டும்தான் நான் சந்திப்பேன். மற்றவர்களை சந்திக்கமாட்டேன். அதேப்போல் என்னை சந்திக்க வருபவர்கள் பிரச்சனையை முழுவதுமாக எழுதி கொண்டுவரவேண்டும்’’ எனச்சொல்லியிருக்கிறார் கங்கனா ரனாவத்.

மேலும் அவர் ‘’தேசிய அளவிலான பிரச்சனைகளை மட்டுமே நான் பேசுவேன். லோக்கல் விஷயங்கள், பஞ்சாயத்து பிரச்சனைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு என்னிடம் வரக்கூடாது'’ என்றும் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

''ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க படிக்காத, பாமர மக்கள் நிறையபேர் வருவார்கள். அவர்களை எல்லாம் எழுதிக்கொண்டுவந்தால்தான் சந்திப்பேன், ஆதார் அட்டை கொண்டுவந்தால்தான் உள்ளே விடுவேன் என்பதெல்லாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல'' என விமர்சித்திருக்கிறது காங்கிரஸ்.