நடிகையாக இருந்து தற்போது பாஜக எம்பி-யாக வலம் வரும் கங்கனா ரனாவத் அரசியல் களத்தில் பரபரப்பாக இருக்கிறார். இதனால், இவரது அன்றாடம் பெரும்பாலும் புது டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கழிவதால் மும்பையில், பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டை விற்க முடிவு செய்திருக்கிறார் நடிகை கங்கனா. இந்த வீட்டைத் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகமாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
கோட் எஸ்டேட் என்ற யூடியூப் சேனல்தான் இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் வீட்டின் உரிமையாளர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், அந்த வீட்டின் காட்சிகளைப் பார்த்த இணையவாசிகள் ‘இது கங்கனாவின் மும்பை வீடுதான்’ எனச் சொல்லி வருகின்றனர்.
இந்த வீட்டின் அளவு 285 சதுர மீட்டர், கட்டுமானப் பரப்பளவு 3042 சதுர அடி. மேலும் 500 சதுர அடியில் கூடுதலாக பார்க்கிங் இடவசதியும் உள்ள அந்த வீடு இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. கடந்த 2020-ல் இந்த வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி வீட்டின் சில பகுதிகளை மும்பை மாநகராட்சி இடித்து சர்ச்சையானது நினைவிருக்கலாம். இதற்காக, மும்பை மாநகராட்சியிடம் கங்கனா 2 கோடி இழப்பீடாக கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.