நேற்று நடந்த இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்துவருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் 599 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருகிறது. இதில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றிருக்கிறது. மெஜாரிட்டிக்கு 326 தொகுதிகளே தேவை என்கிற நிலையில் இப்போதே 395 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றிபெற்றிருக்கிறது Keir Starmer தலைமையிலான தொழிலாளர் கட்சி.
யார் இந்த கீர் ஸ்டார்மர்?
61 வயதான கீர் ஸ்டார்மர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அம்மா நர்ஸ். அப்பா மெக்கானிக்கல் பாகங்கள் தயாரிப்பவர். கீர் ஸ்டார்மர் மிகவும் கஷ்டப்பட்டு படித்து, பள்ளித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஸ்காலர்ஷிப்போடு கல்லூரிக்குள் நுழைந்தவர். ஆக்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார் கீர்.
நாத்திகரான கீர் ஸ்டார்மரின் மனைவி யூதர். இவருக்கு இரண்டு மகள்கள். ஆனால், இதுவரை இவர் மகள்களின் பெயரை பொதுவெளியில் சொன்னதில்லை. முழுக்க முழுக்க விளம்பரங்களைத் தவிர்ப்பவர் கீர்.
இங்கிலாந்தில் 2020-ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் கீர் ஸ்டார்மர். இவர் 2015 முதல் 2024 வரை ஹோல்போர்ன் & செயின்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஸ்டார்மர் சித்தாந்த ரீதியாக முற்போக்கானவர் மற்றும் மையவாதியாக அரசியல் சூழலில் தன்னை அடையாளப்படுத்துகிறவர். குறிப்பாக மன்னராட்சிக்கு எதிரானக் கொள்கைகளைக் கொண்டவர். ஆனால், அவரே இப்போது ஆட்சியமைக்க பிரிட்டிஷ் மன்னர் சார்லஸை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.
கீர் ஸ்டார்மரின் வெற்றி பயணம்…
14 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தொழிலாளர் கட்சியை, அதன் தலைவரான நான்கே ஆண்டுகளில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவைத்திருக்கிறார் கீர் ஸ்டார்மர்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் கீழ் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அரசியல் குழப்பத்தை ஸ்டார்மர் சரியாகப் பயன்படுத்தி தன் பிரசாரங்களை அதனை மையப்படுத்திக்கொண்டுபோனதே வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.
வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தோல்விக்குப் முழு பொறுப்பேற்றிருக்கிறார்.
வாழ்த்துகள் கீர் ஸ்டார்மர்!