வயநாடு நிலச்சரிவு 
செய்திகள்

வயநாடு நிலச்சரிவு : 13 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த மாதவ் காட்கில்... கண்டுகொள்ளாத அரசாங்கம்!

“நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கேரளாவுக்கு மிகப்பெரிய பேரழிவு காத்திருக்கிறது. அழிவுக்கு நீண்ட காலம் ஆகாது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கக்கூடும்.'' - மாதவ் காட்கில்

Puviyarasan Perumal

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் இதுவரை அதிகாரப்பூர்வமாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 400-க்கும் மேற்பட்டோர் காணவில்லை. 1600 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.  பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டன. பல குடும்பங்கள் காணவில்லை. 

இதற்கிடையே பிரபல சுற்றுச்சூழல் விஞ்ஞானி மாதவ் காட்கில் ‘’இந்த நிலச்சரிவு மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இதற்கு ஆளும் அரசாங்கமே முழுமுதற்காரணம். சுற்றுச்சூழலைச் சுரண்டுவதற்கு அரசாங்கமே துணைபோகிறது. அவர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கமுடியாது’’ என்று பேட்டியளித்திருக்கிறார். 

மாதவ் காட்கில்

‘’வயநாடு மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்படும் என்று 13 ஆண்டுகளுக்கு முன்பே தனது தலைமையிலான சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு எச்சரித்தது. அதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் என்னுடைய அறிக்கையை மேற்கோள்காட்டி பேசுவது மக்களுக்கு என்னுடைய அறிக்கை போய் சேர்ந்திருப்பதையே காட்டுகிறது'’ என்று குறிப்பிட்டுள்ளார் 

2013-ம் ஆண்டு மாதவ் காட்கில் வெளியிட்ட அறிக்கையில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்காவிட்டால், கேரளாவில்பெரும் இயற்கைப் பேரழிவுகள் மிக விரைவிலேயே நிகழக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.

“நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கேரளாவுக்கு மிகப்பெரிய பேரழிவு காத்திருக்கிறது. அழிவுக்கு நீண்ட காலம் ஆகாது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கக்கூடும். அப்போது நீங்களும் நானும் உயிரோடு இருப்போம். யார் பொய் சொல்கிறார்கள், யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்'' என்று சொல்லியிருக்கிறார் மாதவ்.

மாதவ் காட்கில் தலைமையிலான குழு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் சுற்றுச்சூழல் ஆபத்து பகுதிகள் (ecologically sensitive area) மற்றும் மண்டலங்களை வகைப்படுத்த பரிந்துரைத்தது. 2013-ம் ஆண்டில் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்த காட்கில் குழு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதையும் ecologically sensitive area (ESA) ஆக அறிவிக்க பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு மாதவ் காட்கில் அறிக்கியை நிராகரித்து கஸ்தூரிரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை நியமித்தது.

காட்கில் குழு பரிந்துரைத்த சுற்றுச்சூழல் சென்சிட்டிவ் பகுதிகளின் அளவை, கஸ்தூரிரங்கன் கமிட்டி 37 சதவீதமாகக் குறைத்தது. தொடர்ந்து ரிசார்ட்டுகள், செயற்கைக் குளங்கள், அதிகப்படியான அளவில் டூரிஸ்ட் ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்ததே நிலச்சரிவுக்குக் காரணம் எனச்சொல்லப்படுகிறது.