நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் தற்போது பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளிக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது. அங்குவைத்து பொதுமக்கள் ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
இதற்கிடையே நேற்று காலை முதலே ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை எங்கு அடக்கம் செய்வது என்பதில் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் வைத்தே அவரை அடக்கம் செய்யவேண்டும் என கோரிக்கைவைக்க, அதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. குடியிருப்பு பகுதிக்குள் அடக்கம் செய்யமுடியாது என விதிமுறைகளை சொல்லி அனுமதி மறுக்க, தற்போது ஆர்ம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை என்றாலும் அவசர வழக்காக ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறது. காலை 9 மணிக்கு இந்த வழக்கை நீதிபதி பவானி சுப்பராயன் விசாரித்து தீர்ப்பளிக்க இருக்கிறார். அவரது தீர்ப்பின்படிதான் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசியத்தலைவர் மாயாவதி ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று சென்னை வருகிறார். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் இறுதிச்சடங்கு புத்த மத வழக்கப்படி நடக்க இருக்கிறது!