சவுக்கு சங்கர் 
செய்திகள்

சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசுக்கு கண்டனம்... சமூக வலைதளங்களில் என்ன எழுதலாம், என்ன பேசலாம்?!

சவுக்கு சங்கர் மீது தமிழக காவல்துறை தொடுத்திருந்த குண்டர் சட்டம் செல்லாது என தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அதோடு தமிழக அரசு சமூக வலைதள விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் கருத்து தெரிவித்துள்ளனர்.

Jeeva

பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப் பேட்டியில் கருத்துகளைத் தெரிவித்ததாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கடந்த மே 12-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகவும், ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக விமர்சிப்பவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

‘’சமூக ஊடகத்தில் பகிரப்படும் கருத்துகளை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. விமர்சனங்களை, கருத்துகளைப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள் தங்கள் சுய முடிவுகளை எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருக்கிறது. அதனால் அரசுக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக அப்படி எழும் கருத்துகளை தணிக்கை செய்ய முயற்சிப்பது நல்லாட்சிக்கான உதாரணம் அல்ல.

 விமர்சனங்கள் வெவ்வேறு ஊடகங்களில், வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு மொழிகளில் முன்வைக்கப்படலாம். பல கருத்துகள் உண்மைக்குப் புறம்பாகவும், பாரபட்சம் மிகுந்ததாகவும் கூட இருக்கலாம். இவற்றால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதற்கான சட்ட வசதிகள் இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் இதில் தலையிடுவது தேவையற்ற வேலை.

சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் அரசு சார்பில் வழங்கவில்லை. அப்படி ஒருவரின் கருத்து பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வன்முறைச் சம்பவங்கள் நடந்தால் மட்டும்தான் குண்டர் சட்டம் பாயவேண்டும். அரசாங்கத்தை, அதன் கொள்கைகளை விமர்சிக்கும் பேச்சுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரக் கூடாது. 

ஒரு அரசாங்கம் தனது குடிமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு சமூக ஊடகப் பதிவு, யூடியூப் வீடியோக்களுக்கும் பின்னால் செல்லும் ஒரு மாநிலம் யாருடைய பார்வையையும் மாற்றாது. மாறாக அது மக்களின் பேச்சுரிமையை முடக்கும். மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

சவுக்கு சங்கர்

மக்கள் மத்தியில் அரசு பற்றி எப்படிப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன, மக்களுக்கு என்னென்ன குறைகள், புகார்கள் உள்ளன என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே ஒரு அரசாங்கம் சமூக ஊடகங்களுக்குப் போக வேண்டும். யார் வாயை மூடலாம் என்று கண்டுபிடிப்பதற்காக அல்ல. கருத்துரிமைதான் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஆன்மாவே’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்பவர்களை அரசு வழக்குகள் போட்டு, சிறையில் அடைத்து மிரட்டமுடியாது என்பதை மீண்டும் ஒருமுறை உயர்நீதிமன்றம் தெளிவாக எடுத்துச்சொல்லியிருக்கிறது. சட்டம் மற்றும் ஒழுங்குக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஒருவரின் கருத்து ஏற்படுத்தினால் மட்டுமே குற்றவியல் நடவடிக்கையை எடுக்கமுடியும்.

மே 12-ம் தேதி கைதுசெய்யப்பட்ட சவுக்கு சங்கர் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப்பிறகு விடுதலை செய்யப்படுகிறார். சங்கர் தரக்குறைவான கருத்துகளை பேசியிருந்தாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத பட்சத்தில், தடுப்புக்காவல் சட்டத்தை பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

‘’ஜனநாயகத்தில் ஒரு அரசாங்கம், அதுவும் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எந்தப் பயனும் தராத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்’’ என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.