மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில், கோவிட்-19 தொடர்பான தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதற்காக, ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக மார்க் ஸுக்கர்பெர்க் நீதித்துறை தலைவர் ஜிம் ஜோர்டனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
"2021-ல் வெள்ளை மாளிகை உள்பட பைடன் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள், கொரோனா தொடர்பான நகைச்சுவை மற்றும் நையாண்டி பதிவுகளை வெளியிடக்கூடாது எனவும், பதிவுகளை தணிக்கை செய்யவேண்டும் என்றும் எங்கள் குழுவினருக்கு பலமுறை அழுத்தம் கொடுத்தனர்" என்று அந்த கடிதத்தில் ஸுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
பைடன் அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், கோவிட்-19 தடுப்பூசிகளை விமர்சிக்கும் பதிவுகள் குறிப்பாக, கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று பதிவு செய்யப்பட்ட பதிவுகளை நீக்கியது மெட்டா குழும. "அப்போதே நான் இது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். அரசாங்கத்தின் அழுத்தம் தவறானது என்பதை நான் இப்போது உணர்கிறேன்" என்று ஸுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
‘’2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பைடன் குடும்பத்துக்கும், உக்ரேனின் புரிஸ்மா நிறுவனத்துக்கும் இடையேயான உறவு குறித்த தகவல்கள் என்னுடைய மெட்டா தளங்களில் பரப்பப்படுவதை FBI எச்சரித்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனுக்குச் சொந்தமான லேப்டாப்பில் இருந்த தகவல்கள் பற்றிய நியூயார்க் போஸ்ட்டின் செய்தியை, நாங்கள் பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கினோம். உண்மை சரிபார்ப்பு குழு அதை சரிபார்த்து சொல்லும்வரை அதை தரவிறக்கம் செய்திருந்தோம். பின்னர், அது தவறான தகவல் அல்ல என்றும், அந்த செய்தி உண்மையானது என்றும் தெரிந்தது. இனிமேல் எந்த ஒரு செய்தியையும் நீக்க கூடாது என குழுவினருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்’’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மார்க் ஸுக்கர்பெர்க்.
"அப்போது எங்கள் குழுக்களிடம் நான் கூறியது போல், எந்த நிர்வாகம், எந்த திசையில் அழுத்தம் கொடுத்தாலும் எங்களுடைய தளங்களில் இனி ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் ஸூக்கர்பெர்க்.
மெட்டா நிறுவனத்தின் தலைவராக உள்ள மார்க் ஸூக்கர்பெர்க், அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தங்களை எதிர்த்து தன் நிறுவனத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். இதன்மூலம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான இணையத்தை வழங்கும் நோக்கில் தங்கள் செயல்பாடுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.