இந்தி மாதத்தின் நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி பாடப்படாததற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவிக்க, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்டாலினை 'இனவாதி' எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு ஸ்டாலின் சில கடும் கேள்விகளை ஆளுநருக்கு முன்வைத்திருக்கிறார்.
ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு முன் வைத்திருக்கும் கேள்விகள் பின்வருமாறு!
1. நீங்கள் ஏன் தவறைசுட்டிகாட்டி சரிசெய்யவில்லை?!
தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியான அந்த வரியை தவறவிட்டது பற்றி உடனடியாக மேடையிலேயே நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா? ஏன் நீங்கள் அதனைச் செய்யவில்லை? பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன் என்கிறீர்கள், அப்போதே நீங்கள் அந்த தவறைச் சுட்டிக்காட்டி சரியாகப் பாடச் சொல்லியிருக்கலாமே! அதைச் செய்யாததற்கு காரணம் என்ன?
2. தமிழை நாங்கள்தான் காக்க வேண்டும்!
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாத கருத்து சொல்கிறார் என்பது தவறான குற்றச்சாட்டாக உள்ளது என நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் தமிழ் எங்கள் இனம், அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க ஏராளமான தமிழர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.
3. தமிழ்மொழிக்கான பாசம் உண்மையா?
பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை உருவாக்கி தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை இந்தியாவிலும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. பிரதமர் மோடி ஐ.நா.வுக்கு தமிழை எடுத்துச் சென்றார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், மோடி அரசு தமிழ்மொழிக்கு செய்தது என்ன? சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக அதிகமாக செலவழிக்கப்படுகிறது. 2013-2014 முதல் 2022-2023 வரையிலான காலகட்டத்தில் சமஸ்கிருதத்திற்காக மொத்தம் ₹2435 கோடி செலவழிக்கப்பட்டது, அதே வேளையில் தமிழ் வளர்ச்சிக்காக வெறும் ₹167 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்டதை விட தமிழுக்குக் கொடுக்கப்பட்ட தொகை வெறும் 7 சதவிகிதம் மட்டுமே.
4. நீங்கள் தமிழ்மொழி பற்றி உண்மை பேசுகிறீர்களா?
நீங்கள் முன்பு தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றீர்கள். திராவிட கோட்பாடே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது என்றீர்கள். இப்போது தமிழ்மொழியை காக்க முன்வருவது உண்மையா? உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, 'திராவிட நல் திருநாடு' தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
என்று தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின். அதோடு, ஆளுநர் கடமையை சரியாக ஆற்ற வேண்டும் என்பதையும், பிளவுவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படாமல், தன் பதவிக்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.