செய்திகள்

மோடி - ஸ்டாலின் டெல்லியில் 25-ம் தேதி சந்திப்பு... புதிய கல்விக் கொள்கையை ஏற்பாரா தமிழக முதல்வர்?

பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். புதிய கல்விக்கொள்கையை ஏற்க தமிழக முதல்வருக்கு மோடி அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puviyarasan Perumal

தேசிய பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ்(PM SHRI) வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம் ஶ்ரீ திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை வழங்க முடியும் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருக்கிறது.

அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அதை ஏற்பதற்கு தமிழக அரசு மறுத்துவருகிறது. மத்திய நிதி கிடைக்காததால் மாநில அரசின் பங்களிப்பு நிதியை கொண்டு இதுவரையில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், நீண்ட காலத்துக்கு இவ்வாரு சமாளிப்பது தமிழ்நாடு அரசுக்கு கடினம் என நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு ரூ.7,425 கோடி ஆகும். இதற்கும் மத்திய அரசின் பங்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கடந்த 14-ம் தேதி சென்னை வந்த முதல்வர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்கப்போவதாக கூறியிருந்தார். புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை, அதிகாரிகளை சந்தித்து பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

அமைச்சர்களின் சந்திப்பை தொடர்ந்து பிரதமரை சந்திக்க, முதல்வர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. பிரதமர் மோடி 21 முதல் 24-ம் தேதி வரை வெளிநாடு செல்வதால், 25-ம்தேதி நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வருகின்ற 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறார்!