Modi and Zelensky Twitter
செய்திகள்

போன மாதம் ரஷ்யா... இந்த மாதம் உக்ரைன்... மோடியின் திட்டம் தான் என்ன?

ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் முழுவதும் தாக்கி ஏராளமான மக்களைக் கொன்ற அந்த சமயத்தில் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி, கொலை குற்றவாளியை கட்டியணைக்கலாமா என்று உக்ரேன் அதிபர் கேள்வி எழுப்பினார்.

Aathini

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைனுக்கு அரசு ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு அவர் மேற்கொண்ட அந்த முதல் பயணத்தை சுட்டிக்காட்டி உலக அரங்கில் விமர்சனங்கள் எழுந்தன. 

மோடி-புதின் சந்திப்பு நடந்த சில வாரங்களுக்கு பிறகு பல்வேறு விஷயங்கள் நடந்துவிட்டது, உக்ரைன் ரஷ்யாவுக்குள் ஊடுருவல் மேற்கொண்டு தாக்குதல் நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. ரஷ்யாவும் தக்க பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளது. இந்த பதற்றமான சூழலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் உக்ரைன் சென்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்திக்கிறார்.

நரேந்திர மோடி, புதின் சந்திப்பு

கடந்த 30 ஆண்டுகளில் உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்தியத் தலைவர் மோடி தான். இந்த முதல் பயணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடியின் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் என்ன?

 

மோடியின் இந்த பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வணிக உறவுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தன்மயா லால் புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Volodimir Zelensky

உக்ரைனின் அதிபர் அலுவலகமும் மோடியின் பயணத்தை பற்றி அறிவிப்பு வெளியிட்டது. ``இது மோடியின் முதல் வருகை. இதில் இரு நாட்டு தலைவர்களும் பல ஒத்துழைப்பு ஆவணங்களில் கையெழுத்திடுவார்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு விஷயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று அறிக்கை வெளியிட்டனர்.

மோடியை விமர்சித்த உக்ரைன் அதிபர் அவரை வரவேற்பாரா? 

மோடி  ஜூலை மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட போது,ரஷ்ய அதிபர் புதினை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். மோடியின் இந்த செய்கை ரஷ்யாவால் பல உயிர்களை இழந்த உக்ரைனில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது. 


ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் முழுவதும் தாக்கி ஏராளமான மக்களைக் கொன்ற அந்த சமயத்தில் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி கொலை குற்றவாளியை கட்டியணைக்கலாமா என்று உக்ரேன் அதிபர் கேள்வி எழுப்பினார். 

Modi to visit Ukraine

உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அறிக்கையில் : "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் உலகின் மிக கொடூரமான குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியது அமைதி முயற்சிகளுக்கு கிடைத்த ஏமாற்றம்" என்று மோடி-புதின் சந்திப்பை விமர்சித்தார். 

மோடி தனது ரஷ்யப் பயணத்தின் போது தாக்குதல் சம்பவங்கள் பற்றி நேரடியாக பேசவில்லை, ஆனால் புதினுடனான சந்திப்பைப் பற்றி பேசும்போது போரை பற்றி குறிப்பிட்டார். 

போரோ, போராட்டமோ, தீவிரவாத தாக்குதலோ எதுவாக இருந்தாலும், மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனும் உயிரிழப்பு ஏற்படும் போது வேதனை அடைகிறான் என்று மோடி கூறினார். “அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, ​​அப்பாவி குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது, ​​இதயம் வலிக்கிறது. அந்த வலி மிகவும் கொடூரமானது.” என்று குறிப்பிட்டார். 

பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் இந்தியா:

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை பற்றி தற்போது வரை மோடி பகிரங்கமாக கண்டிக்கவில்லை. பல சூழல்களில் ரஷ்யாவை இந்தியா கண்டிப்பதைத் தவிர்த்துள்ளது.  அதற்குப் பதிலாக இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்க்க ரஷ்யா மற்றும் உக்ரைனை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

"மோதல் நடந்து கொண்டிருக்கிறது, இந்த மோதலுக்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று திங்களன்று வெளியுறவுத்துறை அதிகாரி லால் கூறினார்.

மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின்

மோடி எப்போதுமே ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நட்பு நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை சமநிலையுடன் கையாள முயல்கிறார். அதே போன்று உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட போது பல்வேறு உதவிகளை இந்தியா செய்தது. அத்தியாவசிய பொருட்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்தது.

தற்போது உக்ரைன் ரஷ்யாவை தாக்கி பதிலடி கொடுத்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா சீற்றம் கொண்டு தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலில் மோடி உக்ரைன் செல்வது  தவறு என்று பல அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் உக்ரைனிடம் மோடி ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஊக்குவிக்கலாம் என்ற ரீதியிலும் செய்திகள் வெளியாகி வருகிறது.