கடவுளின் நாடு என கொண்டாடப்படும் கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டுக்குச் செல்ல இது சரியான தருணம். முகாமிடும் மலைப்பாதைகள், பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள், அதிசய குகைகள், பறவைகள் பாடும் தளங்கள், வித்தியாசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் என அழகிய காட்சிகளின் குவியலாக பிரமிப்பூட்டும் நிலத்திலே நீங்கள் கட்டாயம் காண வேண்டிய 10 இடங்கள் இங்கே!
நுழைவுக் கட்டணம் : இந்தியர்களுக்கு ஒரு நபருக்கு INR 20 மற்றும் வெளிநாட்டினருக்கு INR 30.
10 இந்திய பிரஜைகள் கொண்ட குழுவிற்கு மலையேற்ற கட்டணம் INR 750 மற்றும் 5 வெளிநாட்டு பிரஜைகள் குழுவிற்கு INR 1500.
நேரம்: காலை 6:00 முதல் மாலை 5:00 வரை ஆய்வு நேரம்: 5 மணி
பார்வையிட சிறந்த நேரம்: ஆகஸ்ட் முதல் மார்ச் வரை
வயநாடு மலைத்தொடரின் மிக உயரமான சிகரமான செம்ப்ரா சிகரம், கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. சாகசப் பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கம்; இங்கே, மலையின் பசுமையான நிலப்பரப்புகளையும் மலையேற்றத்தின் சவாலையும் அனுபவிக்க முடியும். செம்ப்ரா சிகரத்தின் உச்சிக்கு ஏறும் வழியில், சிறிய நீர்வீழ்ச்சிகள், வித்தியாசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், மேலும் இதய வடிவிலான ஏரியும் கண்ணுக்கு விருந்து அளிக்கும். இங்கு மலையேற, மேப்பாடியில் உள்ள வனத்துறையிடமிருந்து முன் அனுமதி அவசியம்.
நுழைவு கட்டணம்: பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு INR 20, வெளிநாட்டினருக்கு INR 40
நேரம்: தினமும் காலை 9:30 முதல் மாலை 4:30 வரை
ஆய்வு நேரம்: 2-3 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: ஆகஸ்ட் முதல் மார்ச் வரை
வயநாட்டின் அம்புகுத்தி மலையில், கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எடக்கல் குகைகள், வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் மரபுப் புதையல். கற்காலத்தின் வாழ்க்கையை நம் கண்களுக்கு முன்னால் காட்சிப்படுத்தும் இந்த குகைகள், இப்பகுதியின் முதன்மையான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன.
இங்கு காணக்கிடைக்கும் கல்வெட்டுகள் மற்றும் சுவர் சிற்பங்கள், பண்டைய கற்கால மனிதர்களின் கைவண்ணத்தைப் பிரதிபலிக்கின்றன. தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இந்த குகைகள், உலகெங்கிலும் உள்ள வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குகைக்குள் நுழையும்போது, பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், சிறந்த வடிவில் சித்தரிக்கப்பட்ட மனித மற்றும் விலங்கு உருவங்கள், ஆகியவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
நுழைவு கட்டணம்: கட்டணம் இல்லை ஆனால் ஜீப் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை
ஆய்வு நேரம்: 2-3 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: ஆகஸ்ட் முதல் மே வரை
கேரளாவின் வயநாட்டில் அமைந்துள்ள 900 (தொள்ளாயிரம்) கண்டி, சாகசமும் அமைதியும் ஒன்றாகச் சங்கமிக்கும் பசுமைப் புகலிடம். உயர்ந்த மரங்கள், நீளமான குன்றுகள், மேகங்களில் நடைபோடும் உணர்வு ஆகியவை 900 கண்டியில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ‘கண்டி’ என்பதன் பொருள் நிலம். இந்த பரந்த, மாசுபடுத்தப்படாத நிலப்பரப்பு சாகச ஆர்வலர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
இங்கு நீர்வீழ்ச்சிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் அழகிய இயற்கை காட்சிகளைக் கொண்ட காடுகளின் வழியாக ஆஃப்-ரோட் பயணத்தை உற்சாகமாக தொடங்கலாம். இங்கு உள்ள கண்ணாடி பாலம், ஸ்கைவாக் அனுபவத்தை அளிக்கிறது. மேலும், ஒரு உயரமான மர வீடும் உள்ளது.
900 கண்டி, சாகசக்காரர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் சொர்க்கம். இப்பகுதியின் அழியாத அழகை ரசிக்க தயாராகுங்கள்.
நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு 10 ரூபாய், குழந்தைகளுக்கு 5 ரூபாய். படகு சவாரிக்கு 20 நிமிடங்களுக்கு 100 ரூபாய் செலவாகும்.
நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
ஆய்வு நேரம்: 1-2 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: ஜூலை முதல் மார்ச் வரை
வயநாடுக்கான பயணத் திட்டத்தைத் திட்டமிடும்போது, பூக்கோடு ஏரியையும் சேர்க்க மறக்காதீர். மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அற்புதமான நன்னீர் ஏரி, ஓய்வுநேர பயணிகளை ஈர்க்கும் படிக-தெளிவான நீரைக் கொண்டுள்ளது.
8.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட பூக்கோடு ஏரி, அதன் நன்னீர் மீன்வளம், நீல தாமரை மலர்கள் மற்றும் பலதரப்பட்ட பறவை இனங்களுக்கு பெயர் பெற்றது. பார்வையாளர்கள் படகு சவாரி செய்து மகிழலாம். ஷாப்பிங் சென்டரில் கைவினைப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களை வாங்கலாம். அருகிலுள்ள பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று விளையாடலாம்.
நுழைவு கட்டணம்: INR 80 இந்திய குடிமக்கள், வெளிநாட்டினருக்கு 150 ரூபாய்
நேரம்: காலை 9:30 முதல் மாலை 3:30 வரை
ஆய்வு நேரம்: 3-4 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: ஆகஸ்ட் முதல் மார்ச் வரை
வயநாட்டில் அமைந்துள்ள குருவா தீவு, கபினி நதியால் சூழப்பட்ட சாந்தமானப் பகுதி. கேளிக்கைகள், சாகசங்கள் இல்லாமல், அமைதியில் திளைக்க விரும்புவோருக்கான சிறந்த இடம் இது. இந்த பசுமைச் சொர்க்கம் இயற்கையான பாதைகளைக் கொண்டுள்ளது. பார்வையாளர்கள் பசுமையான காடுகள் வழியாகவும், மூங்கில் பாலங்களைத் தாண்டியும், அபூர்வமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கடந்தும் பயணிக்க வேண்டும்.
தீவின் சில பகுதிகளை நடந்து ஆராயலாம், மற்ற பகுதிகளுக்குப் படகில் செல்ல வேண்டும். இந்த படகு சேவை கேரள சுற்றுலா துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு ரிவர் சஃபாரி மற்றும் மலையேற்றம் போன்ற சாகசங்களையும் அனுபவிக்கலாம்.
குருவா தீவு, இயற்கையின் அமைதியைக் கண்டுகளிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.
நுழைவு கட்டணம்: ஒரு நபருக்கு 10 ரூபாய்
நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
ஆய்வு நேரம்: 2 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: ஆகஸ்ட் முதல் மார்ச் வரை
இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்றும் ஆசியாவின் இரண்டாவது பெரிய அணை என்றும் போற்றப்படும் பாணாசுர சாகர் அணை, அதன் மூச்சடிக்கச் செய்யும் அழகுடன் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கிறது. பசுமையான சுற்றுச்சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த அணை, கொட்டும் நீர்வீழ்ச்சிகள், கம்பீரமான மலைகள் மற்றும் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடன், அழகிய தருணங்களைப் படம்பிடிப்பதற்கான சரியான பின்னணியை பரிசாக வழங்குகிறது.
சாகச ஆர்வலர்கள் ஏரியில் படகு சவாரி, குதிரை சவாரி, ஒட்டக சவாரி மற்றும் மலையேற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்காக இங்கு வந்து செல்கின்றனர். ஆழ்ந்த அனுபவத்திற்காக, பாணாசுரா ஹில் ரிசார்ட்டில் தங்கியிருந்து, உலகத் தரம் வாய்ந்த உணவகமும் புத்துணர்ச்சியூட்டும் மசாஜ் சிகிச்சைகளும் அனுபவிக்கலாம்.
நுழைவு கட்டணம்: இலவசம்
நேரம்: நாள் முழுவதும் திறந்திருக்கும்; 9:00 AM முதல் 5:00 PM வரை பார்வையிட பரிந்துரைக்கப்படுகிறது
ஆய்வு நேரம்: 1-2 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: மழைக்காலம்
வயநாடு சுற்றுப்பயணத்தில் தவறவிடக்கூடாத இடங்களில் ஒன்று சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி. இது சென்டினல் பாறை நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்தின் மையத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி, பசுமையான காடுகளின் மத்தியில் வசீகரமான மற்றும் அமைதியான சூழலுடன் ஓய்வெடுக்க சிறந்த இடம்.
சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி பாறை ஏறுவதற்கும் ஏற்றது. அதேநேரம் ஓய்வெடுக்கவும், இயற்கையின் அமைதியை ரசிக்கவும் சிறந்த இடமாக விளங்குகிறது. மலையேற்றம் மற்றும் ஹைகிங் ஆர்வலர்கள் இந்த பகுதியில் உள்ள பாதைகளை ஆராய்ந்து மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறலாம். மேப்பாடியில் இருந்து சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி, பசுமையாக எழில்கொஞ்சும் வயநாட்டின் தேயிலை தோட்டங்களின் மூச்சடிக்கக் கூடிய காட்சிகளை நீங்கா நினைவுகளாக வழங்கும்.
நுழைவு கட்டணம்: இலவசம்
நேரம்: காலை 8:00 முதல் மதியம் 12:00 வரை மற்றும் பிற்பகல் 2:00 முதல் மாலை 6:00 மணி வரை
ஆய்வு நேரம்: 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை
வயநாட்டில் அமைந்துள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெயின் கோயில், கேரளாவின் செழுமையான ஜெயின் பாரம்பரியத்தின் அடையாளம். இந்த பழமையான கோயில், அதன் உள் கருவறையில் சிக்கலான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட விஜயநகர பாணி கட்டிடக்கலையை அழகிய முறையில் காட்சிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் வழிபாட்டுத் தலமாக இருந்த இது, பின்னர் வணிகப் பகுதியாகவும், 18-ம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் வெடிமருந்துகள் சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தளமாகவும் மாறியது.
இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இந்த ஜெயின் கோயில், ஆண்டுதோறும் மகாவீர் ஜெயந்தி விழாவின் போது, ஏராளமான ஜெயின் பக்தர்கள் கூடும் இடமாக இருக்கிறது. உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், ஜைன மதத்தை பின்பற்றுபவர்கள் மகாவீரரின் சிலையை வழிபட்டுக் கொண்டாடுவது மிகச் சிறப்பான தருணமாக இருக்கும்.
இந்த ஜெயின் கோயில், அதன் அரிய வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அழகிய சிற்பங்களை கண்டு ரசிக்க வருவோரை ஏமாற்றாது.
நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு 10 ரூபாய், குழந்தைகளுக்கு 5 ரூபாய் (12 வயதுக்குட்பட்டவர்கள்), வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாய். ஸ்டில் மற்றும் வீடியோ கேமராக்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். (ட்ரெக்கிற்கு உள்ளே கட்டணம் வேறு)
நேரம்: காலை 7:00 முதல் மாலை 5:00 வரை
ஆய்வு நேரம்: 2-3 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் பிப்ரவரி வரை
வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாகத் திகழும் வயநாடு வனவிலங்கு சரணாலயம், முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையின் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மத்தியில் அமைந்துள்ள இந்த சரணாலயம், புலிகள், யானைகள், லங்கூர்கள், இந்திய காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், மான்கள் மற்றும் ஏராளமான பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் பூச்சி இனங்கள் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடமாகக் இருக்கிறது.
இந்த சரணாலயம், யானை சவாரி, பறவைகள் சுற்றுலா, இயற்கை பாதைகள் மற்றும் ஜீப் சஃபாரி எனப் பல அனுபவங்களை வழங்குகிறது. இயற்கையின் பசுமையான சூழலின் மத்தியில் மறக்கமுடியாத அனுபவத்தை இது நமக்கு அளிக்கும்.
நுழைவுக் கட்டணம்: இந்தியப் பிரஜைகளுக்கு 50 ரூபாய், வெளிநாட்டவர்களுக்கு 200 ரூபாய்
நேரம்: காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
ஆய்வு நேரம்: 3-4 மணி நேரம்
பார்வையிட சிறந்த நேரம்: ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை
அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்துள்ள பறவையியலாளர்களுக்கான சொர்க்கம், பக்ஷிபாதாலம் பறவைகள் சரணாலயம். வயநாடு சுற்றுப் பயணத்தின் போது இங்கு சில மணிநேரங்களைச் செலவிடுங்கள். இந்த சரணாலயம் அரிய பறவை இனங்களுக்கு அடைக்கலமாக விளங்குகிறது.
இந்த பறவைகள் சரணாலயம் போவதே பேரனுபவாக இருக்கும். நீரோடைகள், மலைகள் மற்றும் பாறை குகைகள் வழியாக 3 மணி நேர மலையேற்றப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும். இயற்கைக்கு நெருக்கமான, சலனமில்லா ஒரு ரம்மியமான அனுபவத்தை இந்த இடம் நிச்சயம் தரும்.
இங்கு பட்டியலிடப்பட்ட இடங்கள் தவிர, வயநாடு அழகான ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் அருங்காட்சியகங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான அழகான ரிசார்ட்டுகள் உள்ளன. இந்த பருவமழைக் காலத்தில் வயநாட்டை சுற்றிப்பார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்!