டிரம்ப் Vs கமலா 
செய்திகள்

‘நியூ யார்க் டைம்ஸ்’ Vs எலான் மஸ்க்கின் 'எக்ஸ்' பிரசாரம்... பாரம்பரிய ஊடகங்களுக்கு அச்சுறுத்தலா?

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி நாளை காலை 5.30 மணிவரை நடைபெற இருக்கிறது.

News Tremor Desk

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் மோதுகிறார். உலகமே கூர்ந்து கவனிக்கு  தேர்தலாக மாறியிருக்கும் இந்த தேர்தலில் அமெரிக்காவின் பழம்பெரும் ஊடகங்கள் பலவும் வெளிப்படையாக டிரம்ப் எதிர்ப்பை எடுத்திருக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவின் மிக முக்கிய பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ தொடர்ந்து டிரம்ப்பை எதிர்த்து தலையங்கம் எழுதிவருகிறது.

அதில் நேற்று மிகவும் சிறிய தலையங்கமாக ஏன் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என வெளியிட்டிருப்பது பல்வேறு மக்கள் மத்தியில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

‘’நாம் டொனால்ட் டிரம்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்தவர்கள்தான். அவரால் அமெரிக்காவை வழிநடத்த முடியாது என்பதை மீண்டும் சொல்லத் தேவையில்லை. அவரை நன்றாக அறிந்தவர்கள் கேட்டால் அவரைப் பற்றி சொல்வார்கள். தேர்தல் முடிவுகளைப் பின்னுக்கு தள்ளியவர் அவர். அமெரிக்க ஜனநாயகத்திற்கே அபாயம் விளைவிக்கிறவர். ரோ வழக்கில் அவர் கொண்டுவந்த மாற்றம் பலருக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டிரம்பின் திருட்டுத்தனமும் சட்ட மீறலும் தேர்தலைத்தாண்டி அவரது வாழ்க்கையின் முழு நோக்கமாகவே மாறியுள்ளது. பொய் சொல்லும் ஒழுங்கற்ற இயல்பு கொண்டவரின் நிர்வாகத்தை மீண்டும் அனுமதிக்க முடியுமா? அவர் மீண்டும் ஆட்சி அமைத்தால் அவரை கட்டுப்படுத்தக் கூடிய எவரும் இல்லை. டிரம்ப் அரசு, எதிரிகளைத் தாக்கியவாறே செயல்படும். அதோடு மக்கள் விரோதமான கொடூரமான வெளியேற்றக் கொள்கையை செயல்படுத்துவார்கள்.

உழைப்பாளிகள், நடுத்தர மக்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் வாழ்க்கை சிதைக்கப்படும். சுற்றுச்சூழல் காலநிலையைப் பாதிக்கவும், உலக நட்புறவுகளைத் துண்டிக்கவும், எதேச்சதிகார அரசுகளை வலுப்படுத்தவும் இது வழிவகுக்கும். இப்படி ஒரு ஆட்சி அமெரிக்காவிற்கு தேவையில்லை. அமெரிக்காவின் நன்மைக்காக வாக்களியுங்கள்’’ என நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டிருக்கிறது.

எலான் மஸ்க் - டொனால்ட் டிரம்ப்

பத்திரிகைகள் டிரம்ப்புக்கு எதிராக இருக்கும் நிலையில் எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' தளம் மூலம் தொடர்ந்து டிரம்ப்புக்கு ஆதவராக பிரசாரம் செய்துவருகிறார். அதனால் இந்த அமெரிக்க தேர்தல் பாரம்பரிய ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கான யுத்தமாகவும் மாறியிருக்கிறது.

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால் அது பாரம்பரிய ஊடகங்களுக்கான வீழ்ச்சியாகவும் இருக்கும் என்கிற அச்சம் அமெரிக்காவில் இருக்கிறது!