"அப்பழுக்கற்ற இதயங்களை இறைவன் தன்னிடம் சீக்கிரமாகவே அழைத்துக்கொள்வார்'’ என்பது நமக்கெல்லாம் தெரிந்த பழமொழிதான். ஆனால் சில நேரங்களில், கடவுள் ஏன் அவர்களைத் தன்னுடன் அழைத்துச்செல்ல இவ்வளவு அவசரப்படுகிறார்?! ஸ்ருதியின் வாழ்க்கையைப் பார்க்கும்போது இந்த உலகையே படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளால் ஒரே ஒரு உயிரைக் கூட காப்பாற்ற முடியாதா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை!
ஒரு மாதத்திற்கு முன்பு, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஸ்ருதி தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்திருந்தார். அப்பா, அம்மா, சகோதரி, தாத்தா, பாட்டி என அவரது குடும்பத்தினர் அத்தனைப்பேரையும் இயற்கையின் கொடூர சக்தி மண்ணோடு மண்ணாக்கியது. ஆனால், ஸ்ருதி மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்தார். பேரழிவின்போது வீட்டைவிட்டு வெளியேபோயிருந்த ஸ்ருதி திரும்பி வந்தபோது அவரது வீடு, குடும்பம், வாழ்க்கை என அனைத்தும் சிதறிக் கிடந்தது. ஸ்ருதியின் வாழ்வில் சகலமும் சிதறி வெறுமையின் துயரம் சூழ்ந்து நின்றது.
இருப்பினும், அவளது வாழ்வின் அந்த வெற்றிடத்தில், ஒற்றை நம்பிக்கையாகவும், வெளிச்சம் காட்டும் விளக்காகவும், அன்பின் கரமாகவும் கைகோர்த்து நின்றவர் ஜென்சன்தான். அவளுடைய வருங்கால கணவர். நிலச்சரிவுக்கு முந்தைய தினங்களில், ஸ்ருதி மற்றும் ஜென்சன் தங்கள் திருமணத்தை நிச்சயத்திருந்தனர். உறவுகள் அத்தனைப்பேரையும் இழந்த ஸ்ருதிக்கு ஜென்சன் ஒரே ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் பக்கபலமாக நின்றார். குடும்பத்தை இழந்த பின், ஜென்சனின் தோள் மட்டுமே அவளுக்கு துணையாக இருந்தது.
ஆனால், வாழ்க்கை ஒரு சில நேரங்களில் சிறிய நம்பிக்கையைக் கூட சிதைத்துவிடுகிறது. செப்டம்பர் 7-ம் தேதி, ஸ்ருதி மற்றுமொரு பேரழிவை எதிர்கொண்டாள். ஜென்சனுடன் காரில் பயணம் செய்தபோது, அவர்கள் பயணித்த கார் தனியார் பேருந்து மீது மோதியது. அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஸ்ருதிக்கு சுயநினைவு திரும்பிய போது, ஜென்சன் ஆழ்ந்த கோமாவில் இருந்தார். இரண்டு நாட்கள் உயிருக்கு போராடி, இறுதியில் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முடியாது என்று அறிவித்துவிட்டனர்.
இப்போது, ஸ்ருதி தனது வாழ்க்கையில் மிச்சம் இருந்த ஒரே நம்பிக்கையையும், ஆறுதலையும் இழந்துவிட்டாள். நிலச்சரிவில் உயிர் பிழைத்த ஸ்ருதிக்கு மனதளவில் துணையாக இருந்த ஒற்றை ஜீவனும் இல்லாமல் போனது அவளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் சொல்வதுபோல "ஸ்ருதி மட்டும் அல்ல; முழு சமுதாயமும் அவளுடன் நிற்கிறது." ஸ்ருதியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இது. நமது அன்பும், ஆதரவும் ஸ்ருதியை எப்போதும் தாங்கி நிற்கவேண்டும்.
"சக மனிதனுக்காக கண்ணீர் சிந்தும் இதயம்தான் கடவுள்" என கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்' படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். இன்று நாம் ஸ்ருதிக்கு அந்த இதயமாக இருக்க வேண்டும். இந்த இருள் நிறைந்த பாதையில், ஸ்ருதி தனியாக நடக்கவில்லை என்பதை நாம் அவளுக்கு ஒவ்வொரு நொடியும் நினைவூட்டுவோம்!