துரைமுருகன், சீமான் 
செய்திகள்

‘’என்னை கொலை செய்ய திட்டமிட்டு, என் இனோவா காரை இடித்து தள்ளினார்கள்!’’ - ‘சாட்டை’ துரைமுருகன்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துருமுருகனை நேற்று முன்தினம் ‘’சாதியை இழிவுபடுத்தி பாடல் பாடியதாக’’ திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் கைது செய்தது.

News Tremor Desk

சீமான் உள்பட எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் இந்தக் கைதை கண்டித்திருந்த நிலையில் நீதிபதி ‘’துரைமுருகன் மீது போடப்பட்ட வழக்கு செல்லாது, காவலுக்கு அனுப்பமுடியாது’’ என மறுத்துவிட்டதால் விடுதலை செய்யப்பட்டார் துரைமுருகன். 

வெளியே வந்த துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திமுக அரசாங்கம் தன்னைக் கொலை செய்ய பார்ப்பதாக குற்றம் சாட்டினார். ‘’ நாங்கள் பட்டியல் இன மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்தான் அரசியல் செய்கிறோம். என்னை சாதியை இழுவுபடுத்தி பாடல் பாடியதாக பிசிஆர் வழக்கின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பார்த்தார்கள். இது அப்பட்டமான சட்டத்துக்குப் புறம்பான வழக்கு.

31 வருடங்களாக அதிமுக மேடைகளில் பாடப்படுகிற பாடல் அது. அதை மேற்கோள் காட்டித்தான் நான் பாடினேன். பாடலில் இருந்த அந்தச் சொல் சாதியை இழிவுபடுத்துகிற சொல் என்பது எனக்குத்தெரியாது. இந்த வழக்கு செல்லாது என நீதிபதி சொல்லியிருக்கிறார். ‘’இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’’ என்பதுபோல யாருமே எதிர்த்து பேசக்கூடாது என திமுக அரசு நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை. நீங்கள் பாஜக அரசை பாசிசி அரசு என்கிறீர்கள். உங்களுக்குப் பெயர் என்ன?’’ எனக் கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

துரைமுருகன்

‘’நான் புதிதாக இனோவா க்ரிஸ்ட்டா கார் வாங்கியிருந்தேன். வீராணத்தில் வீடு கட்டுவதைப் பார்ப்பதற்காகவும், அம்மன் கோயிலில் காருக்கு மாலை போடுவதற்காகவும் குற்றாலம் போயிருந்த என்னை பதுங்கியிருந்தாகச் சொல்கிறார்கள். வம்படியாக வந்து என்னுடைய செல்போன்களை பறித்தார்கள். என்னுடைய புது காரிலேயே கூட்டிவந்தார்கள். என் காரை ஓட்டிய டிரைவர் முழு போதையில் இருந்தார்.

ஶ்ரீவில்லிப்புதூரிலேயே விபத்து நிகழ்த்தப்பார்த்தார்கள். என்னைத்திட்டமிட்டு காவலர்கள் கொலை செய்யப்பார்த்தார்கள். மதுரை விளாங்குளம் அருகில் காவலர் என்னுடைய காரைக்கொண்டுபோய் ஒரு கார் மேல் மோதினார். இதனால் பின்னால் வந்த வாகனம் என் கார் மேல் மோதி என்னுடைய டிரைவருக்கு தலையில் அடிபட்டது. என்னுடைய காரை உடைத்துவிட்டு அதன் பிறகு என்னை டெம்போ டிராவலரில் அழைத்துவந்தார்கள். இந்த அரசாங்கம் என்னைக் கொலை செய்யப்பார்க்கிறது. என்னுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை’’ என்று பேசினார் சாட்டை துரைமுருகன்.