மாதபி புச் 
செய்திகள்

யார் இந்த SEBI தலைவர் மாதபி புச்… ஹிண்டர்ன்பர்க் அறிக்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 அம்சங்கள்!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமத்துக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், தற்போது இந்தியாவின் SEBI (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) தலைவரான மாதபி புச் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறது.

Puviyarasan Perumal

யார் இந்த மாதபி புச்?

1966-ம் ஆண்டு மும்பையில் பிறந்த மாதபி புச் ஐஐஎம்- அகமதாபாத்தில் படித்தவர். ஐசிசிஐ வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்த மாதபி புச் பின்னர் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் வேலை பார்த்தார். 2017-ம் ஆண்டு செபி அமைப்பின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட மாதபி, செபியின்  முன்னாள் தலைவரான அஜித் தியாகியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றதும் மாதபி 2022-ம் ஆண்டு செபியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதானிக்கு எதிராக மெளனம் காத்த செபி!

அதானி மனைவியுடன்

அதானி குழுமம் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களை வெளிப்படைத்தன்மை இல்லாத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் மற்றும் ஊடக விசாரணை அறிக்கைகள் இருந்தபோதிலும், அதானி குழுமத்துக்கு எதிராக SEBI நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை!

நிருபர்கள் மீதே நடவடிக்கை!

அதானி பற்றிய அறிக்கையில் எழுப்பப்பட்ட முக்கியமான பிரச்சனைகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ரிப்போர்ட்டை வெளியிட்ட ஊடகவியாளர்களுக்கு ‘ஷோ காஸ்' நோட்டீஸ் அனுப்பியது செபி. 

அதானியின் வெளிநாட்டு நிறுவனங்கள்!

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு மின்சாதனப் பொருட்களை வாங்கி அதை இந்திய நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றார். இந்த நிதிகள் மொரிஷியஸில் உள்ள IPE Plus Fund போன்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் ஆஃப்ஷோர் ஃபண்டுகளுக்கு அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

 ஆஃப்ஷோர் நிதிகளில் SEBI தலைவரின் பங்கு!

வினோத் அதானி பணப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அதே வெளிநாட்டு நிதியில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சுக்கு பங்குகள் இருந்ததை விசில்ப்ளோவர் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த நிதிகள் நிதி மார்க்கெட்டைக் கையாள அதானி கூட்டாளிகளால் பயன்படுத்தப்படும் சிக்கலான கட்டமைப்பின் ஒரு பகுதி!

செபி நியமனத்திற்கு முன் சொத்து பரிமாற்றம்!

மாதபி புச் SEBI தலைவராக 2022-ம் ஆண்டு நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவரது கணவர், அவர்களது வெளிநாட்டு நிதிக் கணக்குகளின் ஒரே ஆபரேட்டராக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு தன் மனைவி பொறுப்பேற்கப் போவதால் இந்த கோரிக்கையை அவர் வைத்ததாகத் தெரிகிறது. 

அகோரா பார்ட்னர்கள் மற்றும் புச்சின் கன்சல்டிங் தொடர்புகள்!

மாதபி புச் தனது செபி தலைவர் நியமனத்துக்கு முன்பு வரை, தனது பங்குகளை தனது கணவருக்கு மாற்றும் வரை, அகோரா பார்ட்னர்ஸ் என்ற ஆஃப்ஷோர் சிங்கப்பூர் ஆலோசனை நிறுவனத்தில் 100% ஈடுபாடு கொண்டிருந்தார்.

பிளாக்ஸ்டோனில் ஈடுபாடு!

மாதபி புச் செபியில் இருந்தபோது, ​​அவரது கணவர் பிளாக்ஸ்டோன் எனும் பெரிய தனியார் பங்கு நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம் REIT(ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்) ஒழுங்குமுறைகளில் இருந்து செபி மூலம் குறிப்பிடத்தக்க வகையில் பயனடைந்துள்ளது.

REIT பங்குகளுக்கு விளம்பர தூதர்!

 SEBI தலைவர் மதாபி புச், REIT-களை வெளிப்படையாக விளம்பரப்படுத்தினார். ‘’எனது எதிர்காலத்திற்கான விருப்பமான முதலீடு'’ என்று பேட்டியளித்தார். இது மறைமுகமாக பிளாக்ஸ்டோன் நிறுவனத்துக்கு உதவி செய்தது.

 தொடர்ச்சியான ஆலோசனை வருவாய்!

செபியில் பொறுப்பில் இருக்கும்போதே, மாதாபி புச் இந்திய ஆலோசனை நிறுவனமான அகோரா அட்வைசரியில் 99% பங்குகளைப் பராமரித்து வருகிறார்.

மாதபி புச் மறுப்பு!

மாதபி புச்

ஹிண்டர்பர்கின் விசாரணை அறிக்கையை செபி தலைவர் மாதபி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் முற்றிலுமாக மறுத்துள்ளனர். எங்கள் நிதி முதலீடுகளில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.