ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜா சென்னை தாம்பரத்தில் வசித்துவந்தார். தாம்பரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சனைக்குரிய நிலங்களைக் கைப்பற்றி, அதை பெரும் தொகைக்கு கைமாற்றித்தரும் ரியல் எஸ்டேட் தொழிலுக்குள் புகுந்த 'சீசிங்' ராஜா விறுவிறுவென வளர்ந்தார். 5 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இவர்மீது பதிவாகியுள்ளன.
ஆற்காடு சுரேஷுடன் கூட்டணி போட்டு சின்னா, பகத் சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னரசு உள்ளிட்டப் பலரை இவர் கொலை செய்திருக்கிறார். நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும், வெடிக்கவைப்பதிலும் கைதேர்ந்தவர் சீசிங் ராஜா எனச்சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் சம்பவம் செய்துவிட்டு ஆந்திராவில் பதுங்குவதும், ஆந்திராவில் சம்பவம் செய்துவிட்டு தமிழ்நாட்டில் பதுங்குவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதேப்போல் சென்னையில் ஒரு குடும்பம், ஆந்திராவில் குடும்பம் என இரண்டு மனைவிகளோடு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் சீசிங் ராஜா. சென்னையில் இருக்கும் இவரது மனைவிக்கு ஒன்றரை மாத குழந்தை இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தக் குழந்தைப் பிறந்திருப்பதாகத் தெரிகிறது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக அமைச்சரோடு மிகவும் நெருக்கமாக இருந்த சீசிங் ராஜா, காவல்துறை அதிகாரிகளையும் கைக்குள் வைத்திருந்திருக்கிறார். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் சிறைக்குப்போவதும் வருவதுமாக இருந்த சீசிங் ராஜா இன்று காலை நீலாங்கரையில் வைத்து என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.
நேற்று டெல்லியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக சீசிங் ராஜா பற்றி பல்வேறு தகவல்களைச் சொன்னதாகத் தெரிகிறது. இதுமட்டுமன்றி சென்னை புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் பிரச்சனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீசிங் ராஜாவைக் கொன்றால்தான் ரவுடிகளுக்கு பயம் வரும் என்றே இந்த என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சீசிங் ராஜாவை ஆந்திராவில் வைத்து போலீஸ் கைது செய்ததாகச் சொன்னாலும் அவர் நேற்று சென்னையில்தான் இருந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
சீசிங் ராஜாவுக்கு அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய கைதியான சம்போ செந்திலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது சென்னை காவல்துறை!