அதிரடியாக ஆபாசமாக பேசி பிரபலம் ஆனவர் பாஜக-வின் திருச்சி சூர்யா. தமிழிசைக்கு எதிராக அதிரடியான கருத்துக்களை இவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தமிழிசை திமுக-வுக்கு சாதகமாக நடந்து வருகிறார், அண்ணாமலைக்கு எதிராக செயல்படுகிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் திடீரென்று திருச்சி சூர்யா சிவாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகத் தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவர் அறிவித்தார். மாநில தலைமையின் அறிவுறுத்தல் படி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு சூர்யா பதில் அளித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன்.
என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன்.
இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்" என்று கூறியுள்ளார்.
சுயமரியாதை இருப்பவனுக்கு பாஜகவில் என்ன வேலை என்று பலரும் சூர்யாவுக்கு பதில் அளித்து வருகின்றனர்! மேலும் உட்கட்சிக் குழப்பம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விபரீதமான முடிவு எடுக்க வேண்டாம் என்றும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பரில் பாஜக பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமான முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததால் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து விலகவதாக அறிவித்திருந்தார். ஆபாசமான பேசியது தொடர்பான நடவடிக்கையை கட்சி நீக்கியதும் மீண்டும் அவர் கட்சியில் சேர்ந்தார். தற்போது 2வது முறையாக திருச்சி சூர்யா கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த சூழலில்தான் மீண்டும் பாஜக-வுடன் இணைந்து பயணிக்க முடியாது என்று சூர்யா பதிவிட்டுள்ளார்!