சென்னை ஜிஎஸ்டி சாலையில் பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை காலை SRM கல்லூரி மாணவர்கள் அதிகளவில் தங்கியிருந்த Abode Valley எனும் குடியிருப்பு பகுதியில் 1000 போலீஸார் போதைப்பொருள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா உள்பட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக 18 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாணவர்களின் எதிர்காலம் கருதி போலீஸ் ஜாமினிலும், நீதிமன்றம் தனது சொந்த ஜாமினிலும் மாணவர்களை விடுவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான பிடெக் மாணவர் நேற்றிரவு கல்லூரி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மாணவரின் பெற்றோரை கல்லூரி நிர்வாகம் அழைத்துவரச் சொன்னதால் பெற்றோருக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என பயந்து மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.