போதைப்பொருள் கைது! 
செய்திகள்

SRM கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வேட்டை… நடந்தது என்ன?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவனும், மாணவியும் ஜிஎஸ்டி சாலையில் வைத்தே அரை நிர்வாணத்தில், ஆபாசமாக நடந்துகொண்டனர். இந்தசம்பவம் குறித்து விசாரித்தபோது இருவரும் போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தது தெரியவந்தது.

Jeeva

கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் அமைந்திருக்கிறது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். முதலில் இன்ஜினீயரிங் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட இந்த தனியார் கல்லூரி இப்போது பல்கலைக்கழகமாக மாறியிருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள். கல்லூரி விடுதிகள், கல்லூரியைச் சுற்றியுள்ள பல்வேறு அப்பார்ட்மெண்ட்களில் மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்றுவருகிறார்கள். இந்த மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவனும், மாணவியும் ஜிஎஸ்டி சாலையில் வைத்தே அரை நிர்வாணத்தில், ஆபாசமாக நடந்துகொண்டனர். இந்தசம்பவம் குறித்து விசாரித்தபோது இருவரும் போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தது தெரியவந்தது.

போலீஸ் ரெய்டு

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் பலரும் மாணவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப்பொருட்கள் சரளமாகப் புழங்குவதால் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நேற்று போலீஸார் தீவிர வேட்டை நடத்தினர். 

தாம்பரம் மாநகராட்சி போலீஸ் இந்த தேடுதல் வேட்டையை கூடுதல் கமிஷ்னர் மகேஸ்வரி தலைமையில் நடத்தியது. அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் நுழைந்து 500 வீடுகளில் சோதனை நடத்தினர். காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த சோதனை நடந்ததில் கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் உள்பட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 19 மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாது சமுதாயத்தின் அமைதியையும் பாதிக்கின்றன. சமூகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம், குற்றச்செயல்களை வேரூன்றச் செய்யும் அபாயம் மிகுந்தது என்பதால், இதுபோன்ற தீவிர நடவடிக்கைகள் அவசியம். பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பும் இவற்றை கட்டுப்படுத்த உதவிக்கரமாக அமைய வேண்டும்.