'தி வயர்' ஆங்கில ஊடகத்தில் சுகன்யா சாந்தா என்ற பத்திரிகையாளர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் “From Segregation to Labour, Manu's Caste Law Governs the Indian Prison System” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில் இந்தியாவில் 11 மாநிலங்களில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு சாதியின் அடிப்படையில் வேலை கொடுப்பதாகக் சுட்டிக்காட்டி இருந்தார். அதனை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு சுகன்யா சாந்தா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். மேலும் அவர் அளித்த மனுவில், மத்திய மாநில அரசுகளின் சிறைகளில் பல்வேறு விதிகள் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஒடிஷா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைதொடர்ந்து 11 மாநிலங்களின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த வியாழன் (அக் - 3) அன்று இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு தீர்ப்பு வழங்கியது.
"எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கு தூய்மைப் பணியும் பிற சாதியினருக்கு சமையல் பணியையும் ஒதுக்குகின்றனர். இது அரசமைப்புச் சட்டப் பிரிவு 15-ஐ மீறுவதாக உள்ளது" என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் "சிறைகளில் சாதியை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும் பட்டியல் சாதியினரைக் குறிவைத்து இத்தகைய மறைமுகச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது சட்ட விரோதம்" என்று தெரிவித்துள்ளனர்.
இறுதியாக தீர்ப்பில், “சிறைக் கையேடு 2016 மற்றும் மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சட்டம் 2023’ ஆகியவற்றில் உள்ள சாதி ரீதியிலான பாகுபாடுகளை மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும்” என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறை கையேடுகளை 3 மாதங்களுக்குள் திருத்தம் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறுவது என்ன?
மனுவில் “பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் தேவர், நாடார், தேவேந்திரர் பிரிவுகளைச் சேர்ந்த கைதிகள், சாதி அடிப்படையில் தனித்தனி கொட்டடிகளில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இது சாதிப் பாகுபாட்டுக்கு உதாரணமாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சாதி அடிப்படையில் கைதிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது. மேலும் சிறைக் கைதிகளை சாதியின் அடிப்படையில் அடைத்து வைத்திருப்பது தவறு” எனக் கண்டித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், நாடு முழுவதும் ஆங்காங்கே சாதி அடிப்படையிலான பாகுபாடுகளும், ஒடுக்கு முறைகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இருப்பினும், சீர்திருத்த நிலையமாய் விளங்கக்கூடிய சிறைச்சாலைகளில் அதிகாரிகளே சிறைவாசிகளை சாதி ரீதியான பாகுபாடுகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்குவது உள்ளபடியே வேதனை அளிக்கிறது.