தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' என்ற புதிய திட்டம் கடந்த பட்ஜெட்டின் போது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
5 லட்சம் ரூபாய் மானியம் வழங்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலம் விண்ணப்பதாரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட நிலத்தினை விண்ணப்பதாரர் 20 வருடங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் கடந்த 5 ஆண்டுகளில் சொந்தமாக நிலம் வைத்திருந்து அதனை எவருக்கும் மாற்றியோ விற்பனையோ செய்திருக்கக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதர்க்கு ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிராக இருக்க வேண்டும். வயது 18-க்கு மேலும் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். அதுமட்டுமின்றி, நிலத்தின் மதிப்பு அரசின் வழிகாட்டு மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் (அ) வட்டாட்சியார் கையொப்பமிட்ட இருப்பிடச் சான்று, வாங்கவுள்ள நிலத்தின் புல எண், சிட்டா, அடங்கல், வரைபடம் மற்றும் நில ஆவணம், நிலத்தை விற்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையிலான ஒப்பந்த பத்திரம், வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 25 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்று ஆகியை இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது!
முன்னதாகவே தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக 'தாட்கோ' வில் டிராக்டர் மானியம் வழங்கும் திட்டத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம், அதிகாரிகளின் ஒத்துழைப்பு போன்றவற்றால் பல மோசடிகள் நடந்து வருகின்றன. அதேபோல் பென்களுக்கு விவசாய நிலம் வாழங்கும் திட்டத்திலும் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் போகிறது. இதை எளிய மக்களிடம் கொண்டுசேர்க்க தாட்கோவும் நேரடி மக்கள் தொடர்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் எளிய மக்களுக்கு போய் சேர வேண்டிய பயன்கள் இடைத்தரகர்களாலும் அதிகாரிகளாலும் சூரையாடப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும பழங்குடியினருக்கு சேரவேண்டிய இது போன்ற பல திட்டங்கள் அவர்கள் வேலை செய்யும் முதலாளிகளாலும் சுரண்டப்படுகிறது.
இதற்க்கு காரணம் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் இதுபோன்ற திட்டங்களைப்பற்றிய முக்கியத்துவமும் தெரியாமல் போவதே. சொந்த மண்ணில் மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வந்த பூர்வக் குடிகளுக்கு இந்த திட்டம் சரியாக முழுமையாக சென்றடையுமா என்பது கேள்விக்குறிதான்..? அதுமட்டுமின்றி வெறும் 20 கோடி ஒதுக்கீட்டில் எத்தனை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பென்களுக்கு விவசாய நிலங்களை பெற்றுத்தரமுடியும்... இந்தவகையில் பார்க்கும்போது இது வெறும் கண்துடைப்பு திட்டம் போல்தான் தெரிகிறது.
பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த மோசடிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதுபோன்ற மோசடிகள் இதிலும் நடக்க வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வேளாண்துறை மற்றும் தாட்கோ மூலம் மானியம் பெற்ற பயனாளிகளை ஆய்வு செய்தால் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும்!