சமக்ர சிக்ஷா அபியான் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிவருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் இந்த நிதியை நிறுத்திவைத்திருகிறது பாஜக அரசு.
தேசியக் கல்விக் கொள்கை 2020 திட்டத்தை தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை. இதோடு பி.எம்.ஶ்ரீ திட்டத்திலும் தமிழக அரசு இன்னும் இணையவில்லை. இதனைக் காரணம் காட்டி ஒன்றிய அரசு இந்தாண்டு முதல் தவணையாக கடந்த ஜூன் மாதமே வெளியிட்டிருக்கவேண்டிய 573 கோடி ரூபாய் நிதியை இன்னும் தமிழக அரசுக்கு வழங்கவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 60 சதவிகித நிதியும், மாநில அரசு 40 சதவிகித நிதியும் ஒதுக்கும். அதில் இந்தாண்டு தமிழக அரசுக்கு 3 ஆயிரத்து 586 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயும், தமிழக அரசு 1,434 கோடி ரூபாயும் ஒதுக்கவேண்டும். மத்திய அரசின் நிதி ஒவ்வொரு ஆண்டும் 4 தவணைகளாகப் பிரித்துவழங்கப்படும். அதில் இந்தாண்டுக்கான முதல் தவணையாக 573 கோடி ரூபாய் கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், கிட்டத்தட்ட செப்டம்பரை நெருங்கும் நிலையில் இன்னும் ஒன்றிய அரசின் நிதி வரவில்லை.
பிஎம் ஶ்ரீ திட்டத்தை ஏற்கச்சொல்லி ஒன்றிய அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும், பிஎம் ஶ்ரீ திட்டத்தில் இணைந்தால் தானாகவே புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என்றும் தமிழக அரசு அதிகார்கள் சொல்கிறார்கள். இதற்கிடையே ஒன்றிய அரசின் நிதி வரவில்லை என்றால் 15 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் இருந்து பல்வேறு பள்ளி கல்வித்துறை செயல்பாடுகள் பாதிக்கும் நிலை உருவாகியிருக்கிறது!