உயர்கல்வி பயிலும் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் கட்டணத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் செலுத்த வேண்டும் என்று கேட்டு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை இப்போது வழங்கியிருக்கிறது. அந்த தீர்ப்பு கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. அதனை கண்டித்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிகுமார்.
“உயர்கல்வி பயிலும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையில் 60% ஒன்றிய அரசும் 40% மாநில அரசும் கொடுக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள் என்ற விவரத்தை மாநில அரசு ஒன்றிய அரசுக்கு அளிக்கும். அதனடிப்படையில் அந்தத் தொகை மாநில அரசுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும். அந்தத் தொகையை ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் மாநில அரசு விடுவிக்கும்.
இந்த நடைமுறையை ஒன்றிய பாஜக அரசு மாற்றி நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் அதை செலுத்துவது என்ற முடிவை எடுத்தது. அதுவும் மாநில அரசு தனது பங்கான 40% ஐ செலுத்தி விட்டு அந்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவித்தால் அதன் பிறகு அது தனது பங்கான 60% ஐ மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும். இரண்டும் வந்த பிறகு அவர்கள் அந்தத் தொகையைக் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான தொகை சுமார் 1500 கோடி ரூபாயை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. இதனால் சுமார் 7 லட்சம் எஸ்சி, எஸ்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி உதவித்தொகை வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை நிர்பந்திக்கின்றன. அவ்வாறு செலுத்தாத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்காமல் அவர்களது படிப்புக்குத் தடை போடுகிறது” என்று பதிவு செய்திருக்கிறார் ரவிக்குமார்.
மேலும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டியிருக்கிறார் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு : ஒன்றிய அரசும் மாநில அரசும் மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கல்வி உதவித் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய விவரங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்.
* கட்டணம் செலுத்தாத மாணவர்களைத் தொடர்ந்து படிக்க அனுமதிப்பதா? இல்லையா? என்பதை அந்தந்த கல்வி நிறுவனங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
*கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் இறுதியாண்டு முடித்த பிறகு அவர்களுடைய சான்றிதழ்களை இந்த நிறுவனங்கள் வழங்காமல் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் கட்டணத்தைச் செலுத்திய பிறகு வழங்கலாம்” என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த உத்தரவு உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் .தனியார் கல்வி நிறுவனங்கள் தம் விருப்பம் போல் அவர்களைக் கையாள வழிவகுக்கும். எனவே இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.