உமா குமரன் 
செய்திகள்

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் முதல் தமிழ்க் குரல்… யார் இந்த உமா குமரன்?!

இலங்கைத் தமிழரான உமா குமரன் லண்டன் மேயர் சாதிக் கானுடன் இணைந்து பணியாற்றியவர்.

Jeeva

நேற்று வெளியான இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியைபிடித்திருக்கிறது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 412 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப்பிடித்திருக்கிறது தொழிலாளர் கட்சி.

உமா குமரன், போப்

கீர் ஸ்டார்மரின் 412 எம்பிக்களில் தமிழர் ஒருவரும் இருக்கிறார் என்பதுதான் மகிழ்ச்சிகரமான செய்தி. ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் தொகுதியின் தொழிலாளர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட உமா குமரன், 19,145 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப்போட்டியிட்டவரைவிட 11,634 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். 

உமா குமரன்

இலங்கைத் தமிழரான உமா குமரன் லண்டன் மேயர் சாதிக் கானுடன் இணைந்து பணியாற்றியவர். 38 வயதான உமாவின் பெற்றோர் இலங்கையில் இருந்து லண்டனுக்கு அகதிகளாக வந்தவர்கள். உமா லண்டனில் பிறந்தவர்.

இலங்கைத்தமிழர்களின் நலன் காக்கப்படும், மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவிக்கப்படும், அடைக்கலம் தேடி அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் மீது வழக்குகள் பதியப்படாது, இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளைத் தந்து வெற்றிபெற்றிருக்கிறார் உமா குமரன்.

வாழ்த்துகள் உமா!