Garima Bakshi - Social Media influencer Instagram
செய்திகள்

நாய் இறைச்சி வறுவல் கடை... இன்ஸ்டாவில் இந்தியப் பெண் பிரபலம் செய்த செயல் வைரல்!

சீனாவின் ஒரு மார்க்கெட்டை சுற்றி காண்பிக்கும் கரிமா, ஒரு கடையை பார்த்து தன் சீன தோழரிடம் அது என்ன, அவர்கள் என்ன விற்கிறார்கள் என்று கேட்கிறார்.

Aathini

சமூக வலைத்தளங்களில் நாய் இறைச்சி, பூனை இறைச்சி போன்ற வித்தியாசமான அசைவ உணவுகள் தொடர்பாக அடிக்கடி வீடியோக்கள் வைரலாகும்.  இம்முறை இந்திய சமூக ஊடக பிரபலத்தால் சீனாவின் நாய் இறைச்சி விற்கப்படும் காட்சிகள் வைரலாகி உள்ளது.

கரிமா பக்ஷி (Garima Bakshi) என்னும் இன்ஸ்டா பிரபலம்,  தனது இன்ஸ்டாகிராமில்  சீனாவின் ஒரு பகுதியில் நாய் இறைச்சி வெளிப்படையாக விற்பனை செய்யப்படும் காட்சிகளை பதிவிட்டிருந்தார். 

அந்த வீடியோவில், சீனாவின் ஒரு மார்க்கெட்டை சுற்றி காண்பிக்கும் கரிமா, ஒரு கடையை பார்த்து தன் சீன தோழியிடம்  அது என்ன? அவர்கள் என்ன விற்கிறார்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த சீன தோழர், ``இது நாய் இறைச்சி” என்று பதிலளிக்கிறார். 

கூண்டில் அடைப்பட்டிருக்கும் நாய்கள்

அந்த பகுதியில் ஒரு நபர் மெகா அளவு கடாயில், நாய் இறைச்சியை சமைத்து கொண்டிருப்பதும், அருகில் ஒரு வாகனத்தில் நாய் ஒன்று அடைத்து வைக்கப்படிருப்பதும் பார்க்க முடிகிறது. நாய் இறைச்சியை கிளறியபடி இருக்கும் நபரை Zoom செய்து காட்டிய கரிமா, ''சீனாவின் தெற்கு பகுதியில் நாய் இறைச்சி ஒரு பொதுவான உணவாகும். தாய்லாந்து, வியட்நாம், இந்தியா போன்ற பல நாடுகளிலும் நாய் இறைச்சி உட்கொள்ளப்படுகிறது” என்று விவரிக்கிறார். 

நம்மூர் சிக்கன் கடையில், கோழிகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பதை போன்று கரிமா சென்ற அந்த சீன மார்க்கெட்டில் நாய்களை கூண்டில் இறைச்சிக்காக அடைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் கரிமா தன் தோழியிடம், சீனாவில் நாய் இறைச்சி நுகர்வு பரவுவதைப் பற்றி கேட்கிறார். 

``சீனாவின் சில பகுதிகளில் உள்ளூர் மக்களில் சிறுபான்மையினர், தோராயமாக 20-30% பேர் மட்டுமே நாய் இறைச்சியை உணவாக சாப்பிடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவதில்லை” என்று சீனத் தோழி விளக்குகிறார். 

Representational Image

இந்த வீடியோ செல்லப்பிராணி வைத்திருப்பவர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பலர் ``இது அவர்களின் கலாச்சாரம், அவர்களின் உணவு, நாம் விமர்சிக்க கூடாது” என்று நடுநிலையாக கமென்ட் செய்துள்ளனர்.

சீனா, தென் கொரியா, ஃபிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற ஒரு சில ஆசிய நாடுகளில், குறிப்பாக ஆகிய நாடுகளில் நாய் இறைச்சி உட்கொள்ளப்படுகிறது. சிலர் நாயின் சில உடல் பாகங்களை மருத்துவ பலன்களுக்காக உண்கின்றனர். சீனாவில் ஒரு காலத்தில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டபோது அவர்கள் வீட்டு நாயை கூட இறைச்சிக்காக கொன்று சாப்பிட்டனர். 

பல மேற்கத்திய நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்பதை அருவருப்போடு பார்க்கிறார்கள். 

கோரொனா காலகட்டத்தில் சீனாவின் ஷென்ஷான் நகரம் நாய், பூனை இறைச்சி விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது. அதற்கு முன்னதாக இந்தியாவின் மிசோரம் மாநிலத்திலும் நாய்களை இறைச்சிக்காக கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இறைச்சி கடை

இந்தியாவில் நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு வந்தது. இறைச்சிக்காக நாய்களை மாநிலங்கள் விட்டு மாநிலம் கடத்துகிற சம்பவங்கள் அரங்கேறியது. இதனால் நாகாலாந்தில் நாய்கறி இறைச்சிக்கு தடை விதிக்க முயற்சிகள் நடந்தன. 

கொரோனா காலகட்டத்தில் பல நாடுகள் நாய், பூனை உள்ளிட்டவைகளின் இறைச்சி உண்பது ஆரோக்கியமற்றது என சொல்லி அதன் இறைச்சிகளுக்கும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.