வயநாடு நிலச்சரிவு 
செய்திகள்

வயநாடு : மண்ணோடு மண்ணாகப் புதைந்த மலைக்கிராமங்கள்… பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டும் கொடூரம்!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரையிலான அதிகாரப்பூர்வ தகவல்படி 133 பேர் பலியாகியிருக்கிறார்கள். பல கிராமங்களுக்குள் இன்னும் மீட்புப்படையினர் நுழைய முடியாத சூழல் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகளவில் உயரும் என அஞ்சப்படுகிறது.

Jeeva

கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 2 மணிக்கு மேல் வயநாட்டில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்துப் பகுதியில் அடுத்தடுத்த மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்ட, காட்டாற்று வெள்ளமும் மக்கள் வசிக்கும் பகுதிகளை சூழ, பல கிராமங்கள் மண்ணில் புதைந்தன.

மேப்பாடி பஞ்சாயத்தில் உள்ள முண்டக்கை எனும் பகுதியில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்ட, அங்கே மீட்புப் பணிகள் தொடங்கயிருந்த நிலையில் சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் நிலச்சரிவும், வெள்ளமும் சூழந்தது. இதனால் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. பலர் மண்ணுக்குள் சிக்கியும், பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும் உயிரிழந்தனர். சிலரின் உடல்கள் பல கிமீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டிருக்கின்றன.

வயநாடு நிலச்சரிவு

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் பலரது நிலமை கவலைக்கிடமாக இருக்கிறது.

இன்னும் 500-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள் என குடும்பங்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இதுவரை நடந்த நிலச்சரிவுகளில் மிக மோசமான நிலச்சரிவாக மாறியிருக்கிறது வயநாடு நிலச்சரிவு!

இன்னமும் மழை நிற்காமல் பெய்துவருவதால் மீட்புப் பணிகளையும் சரியாக மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.