இந்திய அரசியலமைப்புச் சட்டம் 
அரசியல்

சபாநாயகர் தேர்தல் ஏன் இந்தியாவுக்கு முக்கியமானது… சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன?

''ஜெயிக்கிறோமோ, தோக்குறோமோ சண்டை செய்யணும்'' என களத்தில் கே.சுரேஷை இறக்கிவிட்டிருக்கிறார் ராகுல் காந்தி. சபாநாயகர் தேர்தல் முடிவு நாளைத் தெரிந்துவிடும்!

Jeeva

18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் நாளை சபநாயகர் தேர்தல் நடைபெற இருகிறது. சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக சபாநாயகர் தேர்தல நடைபெறுகிறது. பாஜக கூட்டணி சார்பில் மீண்டும் பழைய சபாநாயகர் ஓம் பிர்லாவே போட்டியிடும் நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக கேரளாவை சேர்ந்த கொடிக்குனில் சுரேஷ் பரிந்துரைக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தலின் முக்கியத்துவம்!

நாடாளுமன்றம்

தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில்கொள்ளும்போது சபாநாயகர் தேர்தல் என்பது தவிர்க்கமுடியாததே. பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிகளைப் போல் இல்லாமல், பிஜேபி இப்போது அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. 240 தொகுதிகளில் மட்டுமே வென்றிருப்பதால் 32 எம்பிக்களின் ஆதரவு பிஜேபிக்குத் தேவை. அதனால் தற்போதைய அரசாங்கம் அதன் கூட்டணிக் கட்சிகளான நித்திஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தையும், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியையும் பெரிதும் நம்பியிருக்கிறது. இந்தச் சூழலில் தீர்மானங்கள், அரசியலைமைப்பு சட்ட வரையறைகளின் மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது சபாநாயகர் என்ன முடிவெடுக்கிறார், வாக்கெடுப்புகளை எப்படி நடத்துகிறார் என்பது மிகவும் முக்கியமானது. இதனால் சபாநாயகர் தேர்தல் இந்த அரசியல் சூழலில் மிகவும் முக்கியமானது.

சட்டம் என்ன சொல்கிறது?

சபாநாயகர் தேர்தல் அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி நிர்வகிக்கப்படுகிறது. சபாநாயகர் தனிப்பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது அவையில் இருக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் வாக்குகளை யார் பெருகிறார்களோ அவர் சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

 சபாநாயகரின் பொறுப்புகள்!

சபாநாயகர் ஓம் பிர்லா

மக்களவையின் ஒழுங்கையும், மாண்பையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. நாடாளுமன்றக் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை முடிவு செய்வது, அவை ஒத்திவைப்பு மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்க வேண்டியதும் சபாநாயகரின் கடைமைகள். மேலும் மக்களவையின் விதிகளை உறுப்பினர்களுக்கு விளக்கி அவையை அமைதியான முறையில் செயல்படவைக்கவேண்டும். 

சபாநாயகருக்கான உச்சபட்ச அதிகாரம்!

நாடாளுமன்றம்

சபாநாயகர் முடிவெடுத்தால் ஒரு உறுப்பினரை எம்பி பதவியில் இருந்து நீக்க முடியும். அதாவது இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.

பாராளுமன்ற குழுக்கள் நியமனம்!

பாராளுமன்றத்தின் சார்பில் நியமிக்கப்படும் வெவ்வேறு கமிட்டியின் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பும் சபாநாயகருடையதே.

ரகசிய கூட்டம்!

மக்களவையின் தலைவர் கேட்டுக்கொண்டால் நாடாளுமன்றக் கூட்டத்தை ரகசியமாக நடத்தும் அதிகாரமும் சபாநாயகருக்கு உண்டு. ரகசியக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. மக்களவை எம்பி-யாக இல்லாத அமைச்சர்கள் இருந்தால் அவர்கள் சபாநாயகரின் அனுமதி பெற்று மட்டுமே கலந்துகொள்ளமுடியும்.

சபாநாயகரின் அரசியல் சார்பின்மை!

நீலம் சஞ்சீவி ரெட்டி

சபாநாயகர் என்பவர் ஒரு கட்சியின் மூலம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தாலும், சபாநாயகராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின் கட்சி சார்பற்றவராக நடுநிலையாக இருக்க வேண்டும். 1967-ல் ஜனதா கட்சியின் நீலம் சஞ்சீவ ரெட்டி சபாநாயகராக இருந்தபோது தன்னால் நடுநிலைமையோடு நடந்துகொள்ளமுடியவில்லை என சபாநயாகர் பதவியை  ராஜினாமா செய்த வரலாறு உண்டு.

சபாநாயகரை நீக்க முடியுமா?

மக்களை உறுப்பினர்கள் சபாநாயகர் நடுநிலமையோடு நடந்துகொள்ளவில்லை அவரை நீக்க வேண்டும் என முடிவெடுத்தால் அவையில் 14 நாட்களுக்கு முன்னதாக சபாநாயகரை நீக்கும் தீர்மானம் கொண்டுவரவேண்டும். அதன்பின் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

சபாநாயகருக்கான தகுதிகள் என்ன?

அரசியலைமைப்பு சட்டப்படி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் உறுப்பினராக இருந்தால் போதுமானது. ஆனால், நாடாளுமன்றத்தை எந்த சிக்கலும்  இல்லாமல் நடத்தவேண்டும் என்பதால் அனுபவமிக்க எம்பிக்களை சபாநாயகராகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். 

ஓம் பிர்லா Vs கே.சுரேஷ்

கே.சுரேஷ்

பாஜகவின் ஓம் பிர்லா 2004 தேர்தலில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்துள்ளார். இரண்டாவது முறையாக சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுகிறார். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் சூப்பர் சீனியர் உறுப்பினர்தான் காங்கிரஸின் வேட்பாளர் கே.சுரேஷ். எட்டாவது முறையாக கேரளாவில் இருந்து எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறார் சுரேஷ். 1989 முதல் 1999 வரை அடூர் தொகுதியில் நின்று தொடர்ந்து நான்கு முறை வெற்றிபெற்று எம்பியானவர், 2009 முதல் 2024 வரை மாவெலிக்கரா எனும் தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை வெற்றிபெற்று எம்பியாகியிருக்கிறார்.