கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்,ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கினால் எழுந்த சட்டம் ஒழுங்கு விமர்சனம் என அனைத்தையும் மீறி திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
மொத்தமாக 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா. பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற, நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்திருக்கிறார். மொத்தம் பதிவான 1,95, 495 வாக்குகளில் கிட்டத்தட்ட 60 சதவிகித வாக்குகளை திமுகவே பெற்றிருக்கிறது.
பாமகவின் தோல்விக்குப்பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன ராமதாஸ், ‘’மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்,திமுக செலவழித்த 250 கோடி ரூபாய்க்கு கிடைத்த வெற்றி இது’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். பணபலத்தால் பாமக தோற்கடிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ராமதாஸ்!