விஜய், மகா விஷ்ணு 
அரசியல்

‘’ ‘GOAT’ பட பப்ளிசிட்டியை அமுக்க மகா விஷ்ணு விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்'’ - விஜய் தரப்பு

விஜய் நடிப்பில் நேற்று ‘GOAT' திரைப்படம் வெளியான நிலையில் அதுகுறித்த செய்திகள் இணையம் எங்கும் பரவின. பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று காலை முதல் மகா விஷ்ணு என்பவர் சென்னை பள்ளியில் பேசிய வீடியோ விவகாரம் சர்ச்சையானது. இதன் பின்னால் அரசியல் இருக்கிறது என்கிறது விஜய் தரப்பு!

Jeeva

செப்டம்பர் 5-ம் தேதியான நேற்று விஜய் நடிப்பில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுகம், மாநாட்டுக்கு இடையே ரிலீஸ் ஆகியிருக்கும் இந்தப்படம் நேற்று வெளியானது முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்த நிலையில் மகா விஷ்ணு என்பவர் சென்னை பள்ளியில் பேசிய வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் அந்த வீடியோ குறித்து இன்று அதிகாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த சம்பவத்துக்குப் பின் உளவுத்துறையின் சதி இருப்பதாக சொல்கின்றனர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியினர்.

அமைச்சர் அன்பில் மகேஸுடன் மகா விஷ்ணு

யார் இந்த மகா விஷ்ணு?!

மகா விஷ்ணு என்பவர் ‘மதுரை மகா’ என்கிற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘அசத்தப்போவது யாரு?’ என்கிற பெயரில் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றுவந்தவர். காமெடி பெரிதாக கைகொடுக்காத நிலையில் ‘பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்கிற பெயரில் தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடத்த ஆரம்பித்திருக்கிறார். டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் அந்த தொடர்புகள் மூலம் திமுகவின்  முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களையும் சந்தித்திருக்கிறார். இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி, ஆன்லைனில் தன்னைப்பற்றி ப்ரோமோ வீடியோக்களை வைரலாக்கி பிரபலமாகியிருக்கிறார். அரசியல் தொடர்புகளை வைத்து பள்ளிகளில் பேசுவதற்கும் அனுமதி பெற்றிருக்கிறார்.

விஜய்

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மகா விஷ்ணு தன்னம்பிக்கை உரை நிகழ்த்துவதாகச் சொல்லி அனுமதி பெற்று பேசியிருக்கிறார். ‘’முன்ஜென்மத்தில் பாவம் செய்ததால்தான் மாற்றுத்திறனாளிகள் பிறக்கிறார்கள்'’ என மகா விஷ்ணு பேச, இதற்கு அங்கிருந்த ஆசிரியர் சங்கர் என்பவர் எதிர்ப்புத்தெரிவிக்க அந்த வீடியோ சமூகவலைதளங்களில் நேற்று காலை முதல் வைரலாகத் தொடங்கியது. பின்னர்தான் இது குறித்து முதலமைச்சர் தொடங்கி எல்லோரும் பேச, மீடியாக்களில் இது முக்கியச் செய்தியாக மாறியது.

இந்நிலையில் இந்த செய்தி தேவைக்கும் அதிகமாக மிகைப்படுத்தப்படுவதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாகச் சொல்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர். ‘’நேற்று காலை முதல் GOAT படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. எல்லா செய்தி ஊடகங்களும் விஜய் படத்தைப்பற்றியும், விஜய்யின் வளர்ச்சி குறித்தும் செய்திகளைப் பதிவுசெய்தன. இதைப் பொறுக்காத ஆளும் கட்சியினர் வேண்டும் என்றே சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் விவகாரத்தை ஊதிப்பெரிதாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் இதுதான் மிகப்பெரிய முக்கியச் செய்தி என்பதுபோல முதலமைச்சர் தொடங்கி எல்லோரும் பேசி மீடியாக்களின் கவனத்தை இதன் பக்கம் திருப்புகின்றனர். இப்படி செய்தால் விஜய் பற்றிய செய்திகள் அமுங்கும் என நினைக்கிறார்கள்'’ என்கிறார்கள்.

விஜய் தரப்பு சொல்வது உண்மையா?!