காளியம்மாள், சீமான் 
அரசியல்

விஜய் கட்சியில் சேரப்போகிறாரா காளியம்மாள்… சீமானின் பதில் என்ன?!

''தமிழகம் முழுக்க 60 வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுவிட்டார்கள். மொத்தம் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தப்படுவார்கள்'' என்று சொல்லியிருக்கிறார் சீமான்.

kathavarayan

தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இன்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் கட்சி நிர்வாகிகளோடு செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான். அப்போது செய்தியாளர்கள் விஜய்யுடன் கூட்டணி சேர்வது உறுதியா எனக் கேள்வி எழுப்பினர். ''தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. இதுவரை தேர்தலில் தனித்துதான் நின்றிருக்கிறோம். அப்படித்தான் நிற்போம். ஆனால், தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவரை பொறுத்திருக்கவேண்டும்’’ என்று சொன்னவர் பின்பு சிரித்துக்கொண்டே பத்திரிகையாளர்களைக் கிண்டல் அடித்துப்பேசினார்.

‘’பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தனித்துப்போட்டியிட்டால் ‘இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் தனியா போட்டியிடுவீங்க… உங்களுக்கும் 10 எம்எல்ஏ, 2 எம்பி-ன்னு வேண்டாமா… இப்படி தோத்துட்டே இருந்தா கட்சித் தொண்டர்கள் சோர்ந்து போயிட மாட்டாங்களா’ எனச் சொல்வீர்கள். தம்பி விஜய்யுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிடுகிறோம் என்று சொன்னால் ‘அதெப்படி உங்கள் பலம் தனித்து நிற்பதுதானே’ என்று கேட்பீர்கள். நான் என்ன செய்யவேண்டும் என நீங்களே சொல்லுங்கள்'’ என செய்தியாளர்களிடம் கேட்டார் சீமான்.

சீமான்

‘’தமிழகம் முழுக்க 60 வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுவிட்டார்கள். மொத்தம் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தப்படுவார்கள். இதில் 100 இளைஞர்கள் போட்டியிடுவார்கள்'’ என்று சொன்னார் சீமான்.

அப்போது சீமானிடம் காளியம்மாள் விஜய் கட்சியில் சேரப்போவதாக தகவல் வருகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் '’நாளைக்கு நான்கூடத்தான் சேரப்போறதா செய்தி வரும்… நம்புங்க'’ என்று சொல்லிவிட்டு செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.