முதல்முறையாக பாராளுமன்றத்தில் சபாநாயகர் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் நடக்கிறது. சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் ஜனாதிபதி மர்மு பாராளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.
சபாநாயகர் தேர்தலுக்கு ஓம் பிர்லாவை பரிந்துரைப்பதாக மோடி முன்மொழிந்தார். பின்னர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் முன்மொழிந்துவருகிறார்கள்.
காங்கிரஸ் வேட்பாளரான கே.சுரேஷை கனிமொழி உள்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் முன்மொழிந்துவருகிறார்கள்.
சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துவந்து அமரவைத்தனர்.
குரல் வாக்கெடுப்பின் மூலமே ஓம் பிர்லா சபாநாயகராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓம் பிர்லா சபாநாயகராகப் பொறுப்பேற்றபின் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்!
மக்களவையின் மாண்பையும், ஒழுங்கையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. இதன் மாண்புக்கும், ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பவர்களை எம்பி பதவியில் இருந்து பதவி நீக்கும் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு!
ஓம் பிர்லாவின் வெற்றிக்குப்பின்னர் இந்தியில் பேசிய பிரதமர் மோடி ஓம் பிர்லாவின் புன்னகை மக்களவையை மகிழ்ச்சியில் வைத்திருப்பதாக குறிப்பிட்டு பேசினார்.
மோடி பேசியபின் மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் உரையாற்றினார். ''எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்குவது ஜனநாயகம் அல்ல. சபாநாயகராக எதிர் கட்சி உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்பளியுங்கள்'' என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
''இதே பாராளுமன்றத்தில் நீங்கள் சபாநாயகராக இருக்கும்போதுதான் ஒரேநாளில் 150 எம்பிக்கள் நீக்கம் நடந்தது. தீர்மானங்கள் எதிர்க்கட்சிகள் இல்லாமலே நிறைவேற்றப்பட்டன. அதுபோல் இந்தமுறை நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்'' - சுதீப் பந்தோப்பாத்யாய், திரிணமுல் காங்கிரஸ் எம்பி
சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப்பேசிய மக்களவை திமுக கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு ''நீங்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும், தாமரை மலரைப்போல ஒட்டியும் ஒட்டாமல் இருங்கள். எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளியுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.