தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். அவரின் இந்த பயணம் தமிழக அரசு சார்பில் மிக முக்கியமான பயணமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு நிதி ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்த முதலமைச்சர் தற்போது அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமர் மோடியும் 3 நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார்.
பள்ளிக் கல்வித் துறைக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி இன்னும் ஒதுக்கப்படாமல் இருப்பது குறித்து பேசி, உடனடியாக நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் மனு அளிக்க இருக்கிறார் ஸ்டாலின். பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் 2500 கோடி ரூபாய் நிதியைக் கேட்க இருக்கிறார் தமிழக முதல்வர்.
மேலும், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் சென்னை நகரின் போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய மிகவும் முக்கியமான திட்டமாக இருப்பதால், இந்த நிதி ஒதுக்கீடு உடனடியாக கிடைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் டெல்லி புறப்படுகிறார். அவரது பயணத்தில் முக்கிய அம்சமாக, நாளை காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அரை மணி நேரம் பேசயிருக்கிறார்.
இந்த சந்திப்பு தமிழகத்தின் முக்கிய நலன்களுக்காக நடைபெறும் சந்திப்பு என்பதால், ஸ்டாலின் - மோடி சந்திப்பு தமிழக அரசியலிலும், மத்திய அரசுடனான உறவிலும் முக்கிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.