ராகுல் காந்தி 
அரசியல்

‘’அம்பானி, அதானி லாபம் சம்பாதிக்க, மிடில் கிளாஸ் மக்கள் வரி கட்டுகிறார்கள்'' - ராகுல் காந்தி கோபம்!

மத்திய அரசின் வரி கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்துவரும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு 'வரி பயங்கரவாதம்' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Prakasam

''மோடி அரசின் வரிக்கொள்கைகள் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை அதிகரித்து, நடுத்தர வர்க்கத்தின் முதுகின் மேல் பெரிய பாரத்தை ஏற்றி அவர்கள் முதுகே முறிந்துவிடும் சூழலை உருவாக்கிவிட்டது'' என விமர்சனம் செய்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கார்ப்பரேட் வரி வசூலுக்கு இணையாக தனிநபர் வருமான வரி வசூல் அதிகரித்திருப்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டியுள்ளார் ராகுல் காந்தி.

அம்பானி, அதானி என மோடி தன்னுடைய நண்பர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, நடுத்தரக் குடும்பங்களின் வருமானத்தை பறித்துக்கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்திருக்க்கிறார்.

மத்திய அரசின் வரி கொள்கைகள் நடுத்தர மக்களின் வருமானத்தை மட்டுமே குறிவைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். "வரி பயங்கரவாதம் என்பது பாஜக ஆட்சியின் ஆபத்தான முகம். நடுத்தர வர்க்க மக்களின் சம்பளம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவேயில்லை. அவர்களின் வருமானம் அப்படியேதான் உள்ளது. ஆனால், வருமான வரி பெருமளவில் அதிகரித்து வருகிறது. பயங்கர பணவீக்கத்தின் இந்த காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் அதிக ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கிறது. நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் வருமானம் பெரிய கார்ப்பரேட்கள் அல்லது தொழிலதிபர்களின் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதா என சிந்திக்கவேண்டும். அரசாங்க கொள்கைகளால் ஏதேனும் பலன் கிடைத்திருக்கிறதா என எண்ணிப்பார்க்கவேண்டும்.  இல்லை என்றால் ஏன் உங்களிடமிருந்து இப்படி கண்மூடித்தனமாக வரி வசூலிக்கப்படுகிறது என்று கேள்வி கேட்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

"இந்த வரி பயங்கரவாதம் மற்றும் அநீதிக்கு எதிராக உழைக்கும் மக்கள், நேர்மையான இந்தியர்களுடன் நானும் களத்தில் நிற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை மோடி அரசு மறுத்துவருகிறது!