NEET தேர்வு மோசடி 
அரசியல்

NEET தேர்வு மோசடி… எளியமுறையில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது நீட் தேர்வு மோசடி. நீட்(NEET) தேர்வுகள் என்றால் என்ன, இதில் இந்த ஆண்டு எப்படி மோசடி நடைபெற்றது, நடந்த மோசடி எப்படி வெளிச்சத்துக்கு வந்தது… எளியமுறையில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

Jeeva
  1. தேர்வின் தன்மை : தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளங்கலை), அல்லது NEET-UG (National Eligibility Cum Entrance Test), இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஒரே தகுதி தேர்வு. இது தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த நுழைவுத்தேர்வின் மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

  2. கடுமையான போட்டி : மருத்துவம் இளங்கலைப் படிப்பு படிக்க இந்தியா முழுக்க 1.10 லட்சம் இடங்களே உள்ளன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அதனால், இந்தத் தேர்வு என்பது மாணவர்களுக்கு அதிக அழுத்தம் தருவதாகவும், கடுமையான போட்டி நிறைந்ததாகவும் இருந்துவருகிறது. 

NEET தேர்வு மோசடி

3. முதல் மதிபெண்கள் : 2016-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நீட் தேர்வுகள் நடைபெறுகின்றன. 720 மார்க்தான் இந்தத் தேர்வின் அதிகபட்ச மதிப்பெண். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தேர்விலும் ஒன்று முதல் மூன்று மாணவர்கள் மட்டுமே 720 என்கிற முழு மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆனால்,  இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 67 மாணவர்கள் 720 மதிப்பெண்களைப் பெற்றதுதான் சந்தேகத்தைக் கிளப்பிய முதல் சிவப்புக் கொடி.

4. சர்ச்சைக்குரிய மதிப்பெண்கள்: வழக்கத்துக்கு மாறாக இருந்தது முழு மதிப்பெண்கள் மட்டுமல்ல. 650 - 680 வரையிலான மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கையும் இந்தமுறை மிக அதிக அளவில் இருந்ததுதான் இரண்டாவது சிவப்புக்கொடியை உயர்த்தியது. இங்கிருந்துதான் வினாத்தாளில் பிழை, கருணை மதிப்பெண்கள், வினாத்தாள் லீக் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கிளம்ப ஆரம்பித்தன.

5. கருணை மதிப்பெண் சர்ச்சை : தேர்வு மையங்களில் தாமதம் மற்றும் இயற்பியல் கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருந்ததால் நீட் தேர்வு எழுதிய 1,563 மாணவர்களுக்கு NTA கருணை மதிப்பெண்களை வழங்கியது. கருணை மதிப்பெண்கள் தொடர்பாக வழக்குத்தொடரப்பட உச்ச நீதிமன்றம் கருணை மதிப்பெண்களை ரத்து செய்தது.

6. சட்ட விசாரணை : கருணை மதிப்பெண்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், மீண்டும் நடத்தவேண்டும் என வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தேர்வை நடத்தும் NTA-வுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஜூன் 23 அன்று கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது 

NEET தேர்வு மோசடி

7. மறு தேர்வு : ஜூன் 23-ம் தேதியன்று நடந்த 1563 மாணவர்களுக்கான மறு தேர்வில் 813 மாணவர்கள் மட்டுமே பங்குபெற்றனர். 750 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை.

8. கொஸ்டீன் பேப்பர் லீக் :  வினாத்தாள் கசிவு பற்றிய குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை சிபிஐ தற்போது விசாரித்துவருகிறது. பீகாரில், வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக நான்கு மாணவர்கள் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்டு தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள்களை விற்பனை செய்துள்ளனர். 

9. ஆள்மாறாட்டம் : வினாத்தாள் கசிவு மட்டுமன்றி, ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற பல குற்றச்சாட்டுகளும் எழுந்தன. டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில், தேர்வர்களை ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியவர்களை போலீஸார் கைதுசெய்தனர். 

NEET தேர்வு மோசடி

10. நீட் முதுகலை : நீட் இளங்கலைக்கு தேர்வுக்குதான் இந்த நிலை என்றால், நேற்று நடைபெறுவதாக இருந்த நீட் முதுகலை நுழைவுத்தேர்வு முந்தைய நாள் இரவு (சனிக்கிழமை) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு எழுதுவதற்காக மாநிலம் விட்டு மாநிலம் போன மாணவர்களுக்கு இதுதேவையற்ற அலைக்கழிப்பு. இளங்கலை தேர்வுகள் மீண்டும் நடத்தப்படுமா, ஒத்திவைக்கப்பட்ட முதுகலை நீட் தேர்வு எப்போது நடக்கும் எனப் பல கேள்விகள் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் மீதான அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது.

நீட் தேர்வே மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மோசடி குற்றச்சாட்டுகளால் அடுத்து என்ன நடக்குமோ, மீண்டும் மறு தேர்வு எழுதவேண்டியிருக்குமோ என்கிற கவலையில், கேள்வியில் மாணவர்கள் இருக்கிறார்கள்.