ஓ.பன்னீர்செல்வம் 
அரசியல்

‘’படுதோல்வி பழனிசாமி பதவி விலகவேண்டும்...இல்லையென்றால்?'’ - இறங்கியடிக்கும் ஓ.பன்னீர்செல்வம்

பொய்யின் மொத்த உருவம், செய்நன்றி மறந்தவர், வன்முறையாளர் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்,

Puviyarasan Perumal

நேற்றைய எடப்பாடி பழனிசாமியின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். 2026 தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்க வேண்டுமென்றால் தலைமை மாற்றப்பட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். தொடர் தோல்வியை சந்தித்து வரும் 'படுதோல்வி' எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் நிராகரித்துவிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் அதிமுக மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

''அதிமுகவுக்கு நான் எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தேன் என பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவே தெரிவித்திருக்கிறார். விசுவாசத்தை பற்றிப்பேச 'பத்து தோல்வி பழனிசாமி'க்கு தகுதி இல்லை. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை, தாமாக பதவி விலக எடப்பாடி பழனிசாமி மறுக்கும் பட்சத்தில் தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள். என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம்.

ஓ.பன்னீர்செல்வம்

2019 நாடாளுமன்றத்தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத்தை தோற்கடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார். அதையும் மீறி ரவீந்திரநாத் வெற்றிபெற்றதை பழனிசாமியால் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை.

அதிமுகவின் இன்றைய நிலைமைக்கு முழு முதற்காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. என்னை பொறுத்தவரையில் அதிமுக ஒன்றுபட வேண்டும்.. ஜெயலலிதாவின் ஆட்சியை 2026-ம் ஆண்டு அமைக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம் அதை  நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் தலைமை மாற்றப்பட வேண்டும்'' என்று அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்