பிரியங்கா காந்தி  Created by AI
அரசியல்

சாயலில் மட்டுமல்ல… செயலிலும் இந்திரா காந்திதான்… பிரியங்கா காந்தி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அதைக்கொண்டாட்டமாக காட்சியப்படுத்தியவர்களுக்கு எதிராகப் பேசினார் பிரியங்கா.

Prakasam

கேரளாவின் வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தேர்தல் களத்தில் முதல் அடி எடுத்துவைக்கிறார் பிரியங்கா காந்தி. தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தயாராகியிருக்கும் பிரியங்கா காந்தியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே!

இந்திரா காந்தியின்  மறு அவதாரம்!

பிரியங்கா காந்தி - Priyanka Gandhi

இந்திரா காந்தியின் சாயலாக, இந்திரா காந்தியே மறுபிறப்பு எடுத்துவந்தது போன்ற தோற்றத்தில் இருக்கும் பிரியங்காவுக்கு வயது 52. சிரித்த முகமும், சிம்பிள் காட்டன் புடவைகளும், சுடிதார்களும்தான் இவரது அடையாளம். முகச்சாயலில் மட்டுமல்ல செயலிலும் இந்திரா காந்தியின் குணாதிசயங்களைக் கொண்டவர் பிரியங்கா என்கிறார்கள் இவருக்கு நெருக்கமானவர்கள்.

அமைதியும், அன்பும்!

Priyanka Gandhi

பிரியங்கா டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மாடர்ன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். பின்னர் டெல்லியின் ‘ஜீசஸ் & மேரி’ கல்லூரியில் இளங்கலையில் உளவியல் பட்டம் பெற்றவர். மிகச்சிறிய வயதிலேயே பாட்டியையும், தன் தந்தையையும் கொடூரமான தாக்குதல் மூலம் இழந்தவர் என்பதால் அமைதியையும், அன்பையும் விரும்பியவர். அதனால் புத்த மதக் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார் பிரியங்கா.

திருமண வாழ்க்கை!

கணவர் ராபர்ட் வதேராவுடன் பிரியங்கா காந்தி!

தன்னுடைய 25 வயதில் ராபார்ட் வதேரா எனும் தொழிலதிபரை மணந்துகொண்டார் பிரியங்கா. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. ரியல் எஸ்டேட், ஹோட்டல், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு எனப் பல்வேறு தொழில்கள் செய்துவந்த வதேரா டிஎஎல்எஃப் நிறுவனத்தோடு கூட்டணிவைத்திருந்தார். இது பின்னர் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தாலும், பிரியங்காவின் பெயருக்கு இதனால் எந்தக் களங்கமும் ஏற்படவில்லை.

அறிவார்ந்த தாய்!

மகன் ரையான் ராஜீவ் மற்றும் கணவர் ராபர்ட் வதேராவுடன் பிரியங்கா காந்தி

புத்தகங்கள் படிப்பதிலும், போட்டோக்கள் எடுப்பதிலும் ஆர்வம் உள்ளவர் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்திக்கு 18 வயதைக் கடந்த மகனும், மகளும் இருக்கிறார்கள். மகனுக்கு ரையான் ராஜீவ் என்றும் மகளுக்கு மிரயா என்றும் பெயர் சூட்டியிருக்கிறார் பிரியங்கா.

பாவமன்னிப்பு!

பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி

2008-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது சத்தம் இல்லாமல் வேலூர் சிறைக்குவந்து தன்னுடைய தந்தையின் படுகொலையில் முக்கிய பங்குவகித்த நளினியை சந்தித்துவிட்டுப்போனார் பிரியங்கா. அதேப்போல் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அதைக்கொண்டாட்டமாக காட்சியப்படுத்தியவர்களுக்கு எதிராகப் பேசினார் பிரியங்கா.

நட்பும், பேச்சும்!

மக்களுடன் பிரியங்கா காந்தி

முறையாக அரசியலுக்கு வருவதற்கு முன்பே, பிரியங்கா காந்தி தனது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதியில் தேர்தல் பிரச்சாரங்களை நிர்வகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது புத்திசாலித்தனமான பேச்சும், அடிமட்ட தொண்டர்களுடன் இணக்கமான நட்பும் மீடியாக்களால் பாராட்டப்பட்டது.

கொள்கை முழக்கம்!

ஜார்ஜண்ட் கல்பனா சோரேனுடன் பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார அரசியல் பேச்சுகள் பெரும்பாலும் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவரது பேச்சுத்திறன் உத்திரபிரதேச தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு பெரும்பலமாக இருந்தது.

மக்களின் பேராதரவு

பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி

நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி உத்திரபிரதேசத்தின் ரேபரேலி, அமேதி என இரண்டு தொகுதிக்குள்ளாக மட்டுமே தன்னை சுருக்கிக்கொண்டாலும் மக்களும் சரி, காங்கிரஸ் தொண்டர்களும் சரி பிரியங்கா காந்தியை இந்தியாவுக்கான தலைவராகப் பார்த்தார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. அதற்கான சமீபத்திய உதாரணம்தான் வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுகிறார் என்கிற அறிவிப்பு வெளியானதுமே அவருக்கு குவிந்துவரும் பேராதரவு.

பொதுச்செயலாளர்

பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி

2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனாலும் பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் ஈடுபடவேண்டும் என்கிற கோரிக்கைகளை நிராகரித்து தன் அண்ணன் ராகுல் காந்தியின் வெற்றிதான் தனக்கு மகிழ்ச்சி என பின்புலமாக மட்டுமே இருந்தார் பிரியங்கா.

கேரளாவின் எதிர்காலம்!

பிரியங்கா காந்தி

கேரளாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கேரளாவில் ஆட்சிக்கு வரும் காங்கிரஸ், இந்தமுறை தொடர்ந்து இரண்டு தேர்தல்களாக தோல்வியை சந்தித்துவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக கேரளாவுக்குள் நுழையும் பிரியங்கா 2026 சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸின் முகமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.