ராகுல் காந்தி 
அரசியல்

பப்பு வைத்த ஆப்பு : மோடியை நேரடியாகத் தாக்கிய மோடி… ராகுல் காந்தி உரையின் 10 முக்கிய அம்சங்கள்!

ராகுல் காந்தி பேசும்போது பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் செளஹான் எனப் பலரும் குறிக்கிட்டு ஆவேசமாக பதில் கொடுத்தனர். ஆனால், ராகுல் காந்தி மணிப்பூர் பற்றிபேசும்போது மட்டும் பிரதமர் உள்பட பிஜேபியின் அத்தனை அமைச்சர்களும் எம்பி-க்களும் சைலன்ட் மோடில் இருந்தனர்.

Jeeva

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தான் யார் என்பதை ராகுல் காந்தி நிரூபித்திருக்கும் நாள் இன்று. ஜனாதிபதி உரையின் மீதான விவாதத்தில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்த ராகுல் காந்தியின் பேச்சு பாஜக எம்பிக்களை, அமைச்சர்களை மட்டுமல்ல பிரதமர் மோடியையே அலறவிட்டிருக்கிறது!

55 மணி நேரம் ED என்னை விசாரித்தது!

அரசியலைமைப்புச் சட்டம் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியல் கட்சித்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரத்துக்கு எதிராகப் பணபலத்துக்கு எதிராக, தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எதிராக, சிறுபான்மையினரின் மீதான தாக்குதலுக்கு எதிராகப் போராடியவர்கள் எல்லாம்  கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நான் உட்பட… என் மீது 20-க்கும் மேலான வழக்குகள். 2 ஆண்டு சிறைதண்டனை. டெல்லியில் உள்ள என் வீடு எடுத்துக்கொள்ளப்பட்டது. 24 மணி நேரமும் மீடியாக்களில் என்னைப்பற்றி அவதூறு, தாக்குதல். இவை எல்லாவற்றுக்கும் மேல் 55 மணி நேரம் அமலாக்கத்துறை என்னை விசாரணை செய்தது. 55 மணி நேர விசாரணைக்குப் பிறகு விசாரணை அதிகாரி கேமராவை ஆஃப் செய்துவிட்டு, இவ்வளவு நேரத்துக்குப் பிறகும் கல் மாதிரி அசையாமல் நிற்கிறீர்களே எனக் கேட்டார்.

சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு!

சிவனின் கழுத்தில் பாம்பு இருக்கிறது. இந்த புகைப் படத்துக்குப்பின்னால் இருக்கும் கருத்து என்பது எதற்கும் பயப்படாதே, கலங்காதே என்பதுதான். நாங்கள் பிஜேபியை எதிர்க்கும்போது வன்முறையைக் கொண்டு எதிர்க்கவில்லை. உண்மைக்கு எதிராகப் போராடும்போது நாங்கள் வன்முறையைக் கைக்கொள்ளவில்லை. ஆனால் இந்து என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எப்போதும் வன்முறை, கலவரம் என்பதையே செய்துகொண்டிருக்கிறார்கள். பொய் பிரசாரம் செய்கிறீர்கள். மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கிறீர்கள். இந்து மதம் உண்மைக்காக போராடச் சொல்லியிருக்கிறது. சிவன் உண்மைக்காகப் போராடச் சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்கள் பொய்களைப் பரப்புகிறீர்கள். 

அயோத்திக்கு பயந்து வாரணாசிக்கு ஓட்டம்!

அயோத்தியில் நீங்கள் கோயில் கட்டினீர்கள். தொடக்க விழாவில் அம்பானி, அதானி இருந்தார்களே தவிர அயோத்தியாவின் மக்கள் அங்கே இல்லை. அயோத்தியாவில் மக்களின் நிலங்களைப் பிடுங்கினீர்கள். அவர்களின் வீடுகளை இடித்தீர்கள். அவர்களை கோயிலுக்குள் விடவில்லை. கோயிலுக்குள் நுழைவதற்கு மட்டுமல்ல அவர்களை வீட்டைவிட்டு வெளியே வரவே நீங்கள் அனுமதிக்கவில்லை. அயோத்தியில் தேர்தலில் நின்றால் தோற்றுப் போவீர்கள் என்று சொல்லப்பட்டதால் மோடி வாராணாசிக்கு ஓடினார். அயோத்தி மக்களின் தீர்ப்பு தேர்தலில் தெரிந்துவிட்டது.

மோடியைப் பார்த்து பிஜேபியினரே பயப்படுகிறார்கள்!

காலையில்  ராஜ்நாத் சிங் என்னைப் பார்த்து சிரித்தார். ஆனால், மோடி எப்போதும் சீரியஸாகவே இருக்கிறார். சிரிக்க மறுக்கிறார். வணக்கம் கூடவைக்க மாட்டேன் என்கிறார். அவரைப் பார்த்து பிஜேபினரே கூட பயப்படுகிறார்கள். நாங்கள் எதிர்கட்சி என்பதில் பெருமைப்படுகிறோம். ஆனால், நீங்கள் எப்போதும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறீர்கள்.

பெண்களை அடிவாங்க வைக்கும் விலைவாசி!

ஒரு பெண்ணை நான் சந்திக்கும்போது கணவர் தன்னை தினமும் அடிப்பதாகச் சொன்னார். நான் ஏன் எனக் கேட்டபோது  காலையில் சமைக்கவில்லை என்பதால் என் கணவர் அடிக்கிறார் என்றார். நான் ஏன் சமைக்கவில்லை என்று கேட்டபோது விலைவவாசி உயர்வால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் என எதையும் வாங்கமுடியவில்லை என்றார். நான் என்ன செய்யவேண்டும் என அவரிடம் கேட்டபோது என்னைபோல ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்றார். கேஸ் விலை உயர்ந்துவிட்டது. ஏழைப்பெண்களை பயமுறுத்திவிட்டீர்கள். சிவன் பயப்படாதே என்றார். ஆனால், நீங்கள் பயமுறுத்துகிறீர்கள்.

அக்னிவீர் திட்டம் என்பது யூஸ் அண்ட் த்ரோ!

அக்னீவீர் திட்டம் என்பது ராணுவதிட்டம் அல்ல. அது பிரதமர் அலுவலகத்தின் திட்டம். இளைஞர்களை தேசத்தைக் காக்கவேண்டும் எனச்சொல்லி அக்னீவீர் திட்டத்தில் வேலைக்கு எடுக்கிறீர்கள். ஆனால், அவர்களை  வீரர்கள் என ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். அவர்கள் பணியில் மரணம் அடைந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கமுடியாது என்கிறீர்கள். பென்ஷன் தரமாட்டேன் என்கிறீர்கள். அக்னீவீர் திட்டம் என்பது யூஸ் அண்ட் த்ரோ திட்டம். ராணுவ வீரர்களுக்கு பென்ஷன் தருகிறீர்கள். அக்னீவீர் வீரர்களுக்கு பென்ஷன் இல்லை என்கிறீர்கள். ஆனால், உங்களை நீங்களே தேசப்பற்றாளர்கள் என சொல்லிக்கொள்கிறீர்கள்.

மணிப்பூர் கலவரம் உங்கள் அரசியலால் நிகழ்கிறது!

மணிப்பூரில் வெடித்த கலவரம் இன்று வரை அடங்கவில்லை. ஆனால், பிரதமருக்கு மணிப்பூர் என்கிற மாநிலம் இருப்பதே தெரியவில்லை. உங்கள் அரசியலில் நீங்கள் மணிப்பூரைக் கொளுத்திவிட்டீர்கள். இன்று வரை நாட்டின் பிரதமர் மணிப்பூருக்கு சென்று பார்க்கவில்லை. பிதமரோ, உள்துறை அமைச்சரோ மணிப்பூரைப் பற்றி பேச மறுக்கிறார்கள். மணிப்பூர் கலவரத்துக்காக நீங்கள் வெட்கப் படவேண்டும். அவமானப்படவேண்டும். 

கடவுளிடம் நேரடியாகப் பேசும் மோடி!

பிரதமர் தினமும் காலை கடவுளிடம் பேசுவதாக பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். கடவுளின் அவதாரம் என்றும் சொல்கிறார். அவர் கடவுளிடம் நேரடியாகப் பேசித்தான் டிமானிட்டைசேஷனை அறிவித்தாரா? கடவுளிடம் பேசித்தான் ஜிஎஸ்டியை அமல்படுத்தினாரா? இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிற சிறுதொழிகள் எல்லாம் இன்று மூடப்பட்டுவிட்டன. நாட்டில் வேலைவாய்ப்பு சுத்தமாக இல்லை. எல்லா சிறு நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டி சிறு தொழில்முனைவோரை துன்புறுத்துகிறது. ஜிஎஸ்டி சின்ன சின்ன தொழில்களை எல்லாம் மூடவைக்கிறது.

விவசாயிகள், மாணவர்கள் தீவிரவாதிகள் அல்ல!

நரேந்திர மோடி கோடீஸ்வரர்களுக்காக மட்டும்தான் வேலைசெய்கிறார். நில அபகரிப்பு சட்டப்படி இழப்பீடு வழங்கப்பட்டுவந்தது, ஆனால், இப்போது இழப்பீட்டுத் திட்டத்தை மூடிவிட்டீர்கள். இன்றுவரை விவசாயிகள் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 70,000 விவசாயிகள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்கள் விவசாயிகள் இல்லை, தீவிரவாதி என்கிறீர்கள். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தவர்களே, கொஞ்சமாவது எங்கள் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்றுதான் விவசாயிகள் கேட்கிறார்கள். 

நீட் என்பது வியாபாரம்!

நீட் என்பது தொழில்முறை தேர்வல்ல. நீட் என்பது வியாபாரம். நீட் குறித்து விவாதம் நடத்தலாம் வாருங்கள். இருவரும் விவாதம் நடத்தி மாணவர்களின் நலன்களை காப்போம்.

இந்த நாட்டில் பொய்யை விதைக்காதீர்கள். அச்சத்தை விதைக்காதீர்கள். வெறுப்பை விதைக்காதீர்கள். விவசாயிகளின் கோரிக்கைளை கேளுங்கள். மாணவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேளுங்கள். மக்கள் உங்களை நேசிப்பார்கள்.