பிரியங்கா காந்தி - Priyanka Gandhi Priyanka Gandhi's official X page
அரசியல்

ரேபரேலியில் ராகுல்… வயநாட்டுக்கு வரும் பிரியங்கா… தங்கையை தேர்தலில் களமிறக்கும் அண்ணன்!

1967-ல் முதல்முதலில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இங்குதான் போட்டியிட்டு வென்றார் என்பதோடு மூன்று முறை இந்தத்தொகுதியின் எம்பியாக இருந்திருக்கிறார். அதேப்போல் சோனியாகாந்தியும் 2004 முதல் தொடர்ந்து நான்கு முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று 20 ஆண்டுகளாக இந்தத் தொகுதியின் எம்பியாக இருந்தார்.

Prakasam

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலுமே வெற்றிபெற்ற ராகுல் காந்தி, எந்த தொகுதியை தக்கவைத்துக்கொள்ளப்போகிறார் என்கிற கேள்வியிருந்தது. அதற்கான விடையை இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார். 

கடந்த 2019 தேர்தலிலும்  அமேதி, வயநாடு என இரண்டு தேர்தலில் போட்டியிட்டார் ராகுல். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தவர் வயநாட்டில் வெற்றிபெற்றார். இதனால் வயநாடு எம்பியாகத்தொடர்ந்தார். இந்தமுறை இரண்டு தொகுதிகளையுமே வென்றிருப்பதால் வயநாட்டில் ஏற்கெனவே எம்பி-யாக இருந்துவிட்டதால் இந்தமுறை ரேபரேலியை தொடர்வதாக டிக் அடித்திருக்கிறார் ராகுல். அதேநேரம் தனக்கு வாக்களித்த கேரள மக்களும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தனது தங்கையும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கியிருக்கிறார் ராகுல். தேர்தலுக்கு முன்னதாக உத்திரபிரதேசத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இந்தமுறை அண்ணன் சொல்லைத்தட்ட முடியாமல் ஓகே சொல்லியிருக்கிறார்.

சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

ரேபரேலி காங்கிரஸின் கோட்டை எனச்சொல்லப்படும் தொகுதி. 1967-ல் முதல்முதலில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இங்குதான் போட்டியிட்டு வென்றார் என்பதோடு மூன்று முறை இந்தத்தொகுதியின் எம்பியாக இருந்திருக்கிறார். அதேப்போல் சோனியாகாந்தியும் 2004 முதல் தொடர்ந்து நான்கு முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று 20 ஆண்டுகளாக இந்தத் தொகுதியின் எம்பியாக இருந்தார். இந்தமுறை சோனியாகாந்தி தேர்தலில் போட்டியிடாததால் ரேபரேலியயிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இப்போது காங்கிரஸின் கோட்டையைவிட்டு விடக்கூடாது ரேபரேலியின் எம்பியாகத் தொடரும் முடிவை எடுத்திருக்கிறார் ராகுல்