சீமான் 
அரசியல்

‘’விஜய் ரசிகர்களும் எனக்குத்தான் ஓட்டு போடுவார்கள்'’ - சீமான்

''விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்’’ - சீமான்

Puviyarasan Perumal

நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் பிரவேசம் மற்றும் அதற்கான மக்கள் வரவேற்பு கடந்த இரண்டு நாட்களாக பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யினால் தன் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என பேட்டியளித்துள்ளார்.

தேனியில் இன்று காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் விஜய்யின் கொள்கை முழக்கப் பேச்சு மற்றும் மாநாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

விஜய்

"விஜய் ரசிகர்கள் கூட்டமாக வருவார்கள், ஆனால் வாக்குகள் சந்தேகமே"

"எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு நடிகர் கட்சி தொடங்கினால் அவரை பார்க்கப்போகும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். விஜயின் அரசியல் பிரவேசத்துக்காக வந்த மக்கள் கூட்டமும் அதற்கு ஓரு உதாரணம். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்குமா என்பது சந்தேகமே" என அவர் தன் பார்வையை தெரிவித்தார். 

"நான் மக்களின் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டி களத்தில் இறங்கியவனாக இருப்பதால், மக்கள் என்னைப் புரிந்துகொள்ளும் விதத்தில் எனக்குத்தான் ஆதரவளிப்பார்கள். விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்’’ என்று சீமான் பேசி இருக்கிறார்.