தமிழக அரசின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட பண மோசடி வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டார். 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது சமூக தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''செந்தில் பாலாஜியின் தியாகம் பெரியது'' என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் தியாகம் பெரியது என்று கூறியதற்கு கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
''செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்கு சென்றார். செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால் நாட்டுக்காக தியாகம் செய்து விட்டு சிறைக்கு சென்றவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது?'' என்று கேள்வி எழுப்பிய சீமான், ''செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதே திமுக போட்ட வழக்கில்தான்”என்றார்.
மேலும், விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது குறித்து பேசிய சீமான், ''பெரியாருக்கு மாலையிட்டு மறியாதை செலுத்தியதால் திராவிடக் கொள்கையை விஜய் கையில் எடுத்துவிட்டதாக அர்த்தம் இல்லை'' என்றும் பேசினார்.