அரசியல்

மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமனங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனங்கள் என்பது சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Puviyarasan Perumal

மத்திய அரசின் முக்கிய பதவிகளில் நேரடியாக அதிகாரிகளை பணியமர்த்துவதால், SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீடு முற்றிலும் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது X தளத்தில் "சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும் எனவும். லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். தகுதிவாய்ந்த பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பது ஆகும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

''மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் OBC, SC/ ST பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். மேலும், தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற 'க்ரீமி லேயர்' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும். அதற்கு முன்பு பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட, நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது அவசியம் என்று தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.