தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் அரசியல் மாநாடு நடிகர் விஜய் தலைமையில் இன்று விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறுகிறது. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நிகழ்வாக இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். பிரமாண்ட அளவில் செய்யப்பட்ட ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அழகிய மேடைக் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இம்மாநாட்டை தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் சிறப்பான நிகழ்வாக அமைக்க இருக்கிறது.
பிரமாண்ட கொடியேற்ற விழா!
மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக நடிகர் விஜய் தன்னுடைய கட்சி கொடியை 100 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்குகிறார். வரவேற்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 600-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்களில் கட்சி கொடிகள் கம்பீரமாக பறக்கவிடப்பட்டுள்ளன. மாநாட்டு திடலானது 85 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதற்கான மேடை கிழக்கு நோக்கியவாறு 60 அடி அகலம் மற்றும் 170 அடி நீளத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையின் முன்புறத்தில் கட்சி கொடியின் சின்னம் மற்றும் இரண்டு யானைகள் வரைந்து, “வெற்றிக் கொள்கைத் திருவிழா” என குறிப்பிட்டுள்ளனர். மேடையிலிருந்து 12 அடி உயர மற்றும் 600 மீட்டர் நீள நடைபாதையில் நடந்துக்கொண்டு விஜய் மக்களிடம் கையசைத்து வாழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று நாயகர்களின் நினைவு கட்-அவுட்கள்!
மாநாட்டு திடலுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தந்தை பெரியார், காமராஜர், டாக்டர் அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் நினைவு கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர் போன்ற மன்னர்களின் பெருமைக்குரிய கட்-அவுட்களும் உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மாநாட்டின் பாதுகாப்பு கருதி, 4,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 700 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 மின்விளக்குகள், மற்றும் இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வாகன நிறுத்துமிடங்களில் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொண்டர்களுக்கான வசதிகள்!
மாநாட்டில் பங்கேற்கும் 5 லட்சம் தொண்டர்களுக்கு, சிறு பிஸ்கட் பாக்கெட், 50 கிராம் மிக்சர் மற்றும் ½ லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொண்டர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் மற்றும் 350 நடமாடும் கழிவறைகள் நிறுவப்பட்டுள்ளன.
மருத்துவ முகாம்கள்!
மாநாட்டு திடலில், அவசர சிகிச்சைகளுக்கு 17 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக அமரும் வகையில் முகாம்கள் பிரிக்கப்பட்டு, 150 டாக்டர்கள், 150 செவிலியர்கள் மற்றும் 22 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. தொண்டர்கள் மிதமான குளிர்பானங்களும், உடல்நலமற்றோருக்கு உடனடி மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாகன நிறுத்தங்கள்
மாநாட்டு திடலின் அனைத்து பகுதிகளிலும் ஒளிபரப்பு சிக்கல்களை தவிர்க்க செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாநாட்டு நிகழ்ச்சிகளை தொலைவில் இருந்தே காணும் வகையில் பிரதான இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் பொருத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தம் தேவைக்காக 207 ஏக்கர் பரப்பளவில் 4 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியல் எதிர்பார்ப்புகள்!
இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், எதிர்கால அரசியல் பயணத்தை குறித்த கருத்துக்களைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மக்கள், மற்ற அரசியல் கட்சியினரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இம்மாநாடு, தமிழ்நாட்டில் புதிய அரசியல் அலைகளை உருவாக்கும் நிகழ்வாக அமைய வாய்ப்புள்ளது.