திருமாவளவன் 
அரசியல்

தனியொருவனாக திருமாவளவன் திரட்டிய கூட்டம்... விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு வெற்றியா?

விசிக-வின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டின் வெற்றி, 2026 சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு தொகுதி பங்கீட்டில் கூடுதல் இடங்களைப் பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Puviyarasan Perumal

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விசிக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு கடந்த அக்டோபர் 2-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை விசிக தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார்.

மது ஒழிப்புதான் திருமாவின் நோக்கமா?

இன்றைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் திருமாவளவன் கவனம் ஈர்க்ககூடிய அரசியல் தலைவராக இருக்கிறார். மேலும் மக்கள் நலன் கருதி சிந்தித்து செயல்படக்கூடிய தலைவராகவும் இருக்கிறார். மது மற்றும் போதைப் பழக்கத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகிறது எனபதை திருமாவளவன் நன்கு அறிவார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்த பெரும்பான்மையினர் தலித் மக்களே. இது அந்த சமூகத்தின் ஒற்றை தலைவனாக அரசியல் களத்தில் நிற்கக் கூடியவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். உண்மையில் திருமாவளவன் இந்த மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டை மக்கள் நலனுக்காகவே நடத்தியிருக்கிறார். இருந்தாலும்…! 

உலகம் முழுக்க உள்ள நாடுகளில் மது ஒழிப்பு என்பது சாத்தியப்படாத ஒன்றாகும். இதற்கு தமிழ்நாடு, இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. இதை நன்கு அறிந்தவர் திருமாவளவன். இருப்பினும் தனது அரசியல் முன்னேற்றத்துக்கு மது மற்றும் போதை ஒழிப்பு அவருக்கு நல்ல களமாக அமைந்தது. அதற்கு ஏதுவாக கள்ளக்குறிச்சி சம்பவமும் அரங்கேறியது. ஒருவேளை கள்ளக்குறிச்சி சம்பவம் நடக்காமல் போயிருந்தால் திருமாவளவன் இந்த மாநாட்டை நடத்தியிருப்பாரா என்பது சந்தேகம்தான். 

இந்த மாநாட்டின் பின்னால் ஒளிந்திருக்கும் திருமாவின் 2026 தேர்தல் கணக்கு?

பல அரசியல் நெருக்கடி மற்றும் விமர்சனங்களுக்கு இடையே இந்த மாநாடு லட்சக்கணக்கான சிரத்தைகளுக்கிடையே வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டதுதான். இது எப்படி இருக்கிறது என்றால், கள்வனையே அழைத்து காவல்காரனாக பணியில் அமர்த்துவதுபோல இருக்கிறது. இருப்பினும், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் இந்த மாநாட்டின் மூலம் திருமாவளவன் இன்றைய தமிழக அரசியல் களத்தில் விசிக மாபெரும் சக்தி என்பதை காட்டியதுடன், திமுகவுடனான கூட்டணிக்கும் ஆபத்து வராமல் காய் நகர்த்தியிருக்கிறார். இதன் எதிரொலி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கப் போவது உறுதி.