கடந்த வாரம் பாரளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய திருமாவளவன் ‘’போதைப்பொருட்கள் எந்தத்தடையுமின்றி இந்தியா முழுக்க புழங்குகின்றன. இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. கள்ளச்சாரய மரணங்கள் நிகழ்கிறது. இந்தியா முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்’’ எனக்குறிப்பிட்டார். உடனே எழுந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘’கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். திருமாவளவன் இந்தப்பாடத்தை தமிழ்நாட்டில் எடுக்கவேண்டும்’’ எனப்பேசினார். அப்போதே திருமாவளவன் கள்ளச்சாராயம், மதுவிலக்குப் பற்றி பாராளுமன்றத்தில் தற்போதைய சூழலில் பேசியிருக்கக்கூடாது என திமுகவின் சீனியர் எம்பிக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது.
இதற்கிடையே தற்போது பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நாளில் இருந்தே உண்மைக்குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பிவருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
இன்று காலை பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசியத்தலைவர் மாயாவதி சென்னை வந்து ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது அருகிலேயே இருந்தவர் பின்னர் மாயாவதியின் கருத்தை கிட்டத்தட்ட ஆதரித்து பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
மாயாவதி இன்று காலை பேசும்போது ‘’தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றவேண்டும்'’ என கோரிக்கைவிடுத்தார். மாயாவதி சென்றபின் திருமாவளவனிடம் ''மாயாவதியின் கோரிக்கையை நீங்கள் ஏற்கிறார்களா'' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் ‘’மாயாவதி சிபிஐ விசாரணைக் கோரியிருப்பதற்கு உண்மைக் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை என அவர் கருதுவதுதான் காரணம். அவர் கருத்தில் நான் உடன்படுகிறேன். தமிழ்நாடு அரசு மாயாவதி அம்மையாரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை வேண்டும். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்'’ எனப்பேசியிருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் திருமாவளவன் கூட்டணிக்கு எதிர்பக்கம் நின்றுபேசுவது சரியில்லை என திமுக தரப்பில் இருந்து அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், திருமாவளவன் திமுகவின் பேச்சுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என்கிறார்கள்.
இதற்கிடையே திமுக ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் திருமாவளவன் மீது தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பித்திருப்பதை திருமாவளவனின் கவனத்துக்கு கொண்டுச்சென்றிருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள்!