அரசியல்

முதலீடுகளை ஈர்த்து வந்த முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன்! - அந்தர்பல்டி அடித்த திருமாவளவன்!

இன்று தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார்.

Puviyarasan Perumal

கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகவினர் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது வந்தது. நேற்று முன்தினம் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பிய மு.க.ஸ்டாலினை இன்று அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் சந்தித்து பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பேசிய திருமாவளவன், இந்த சந்திப்பானது முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை பெற்று வந்ததற்கு வாழ்த்து தெரிவிக்கும் சந்திப்பு என்று தெரிவித்தார். 

அக்டோபர் 2ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு திமுக தரப்பிலிருந்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்ததாக தெரிவித்தார். மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கும் உடன்பாடு இருக்கின்றது எனவும் நிர்வாக சிக்கலை கருத்தில்க்கொண்டு மதுவிலக்கை அமல்படுத்துவதில் சிரமம் இருப்பதாகவும், படிப்படியாக மதுவிலக்கை நடைமுரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூரியதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் ஒன்றிய அரசுக்கு தேசிய அளவிலான மதுவிலக்கு கோரிக்கையை முன் வைப்பதற்காக திமுகவும் இந்த மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்ளும் என்று முதல்வர் கூறியதாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார். 

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று பேசி இருந்ததைப் பற்றி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடந்ததா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதைப் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் கட்சியின் நீண்ட கால கருத்து அது இன்றும் என்றும் தொடரும் என்று கூறினார். மேலும் திமுக விசிகாவுக்கு இடையே எந்த ஒரு விரிசலும் இல்லை எனவும் எங்கள் கூட்டணி தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மாநில அரசை வலியுறுத்தி மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போவதாக அறிவித்த திருமாவளவன் தற்போது மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படும் என்றும் பூரண மதுவிலக்குக்கு பதிலாக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வலியுருத்தி இந்த மாநாடு நடைபெறும் என்று கூறியது முன்னுக்கு முரணாக இருக்கின்றது. திருமாவளவனின் கணக்கு தான் என்ன.. எதற்கு இந்த நாடகம்.. என்பதை காலம் தான் கணித்து சொல்லும்..